ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி.. திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.. எப்போது?
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு செய்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். இந்த வைகுண்ட ஏகாதசி விழா 2 வகைகளாக நடக்கும்.
அதன்படி வைகுண்ட ஏகாதசிக்கு முன் 10 நாட்கள் பகல் பத்து என்றும், ஏகாதசிக்கு பின் வரும் 10 நாட்கள் ராப்பத்து என்றும் அழைப்படுகிறது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 2ல் சொர்க்கவாசல் திறப்பு
அதன்படி டிசம்பர் 22ல் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. மறுநாள் பகல் பத்து உற்சவம் துவங்கி நடக்கும். ஜனவரி 1ல்மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருள உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 2ம் தேதி அதிகாலை நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடக்கும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் திருக்காட்சி தர உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னேற்பாடுகள் தீவிரம்
இந்த விழாவையொட்டி தற்போது கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாடு பணிகள் துவங்கி நடைபெற்று வருகுிறது. பரமபதநாதர் சன்னதி முதல் ஆயிரங்கால் மண்டபம் வரை கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணியும், பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காக மேல உத்தர வீதியில் பந்தல் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இருக்கை வசதியும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 2ல் உள்ளூர் விடுமுறை
இந்நிலையில் தான் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அந்த மாவட்டத்துக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நாளான 2023 ஜனவரி 2ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பார்பாக கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு அலுவலகங்களுக்கும்...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 2-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும்.

தேர்வுக்கு பொருந்தாது
இருப்பினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications