ஜெயலலிதா பாணியில்.. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறிப்பிட்டு "செய்தீர்களா" என கர்ஜித்த விஜய்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் திருச்சி மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால், காலையில் 10:30 மணிக்கு தொடங்க வேண்டிய விஜயின் பிரச்சாரம் மதியம் 2.30 மணிக்கு மேல் தான் தொடங்கியது. அப்போது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு ஜெயலலிதா போல செய்தீர்களா என்று தொண்டர்கள் மத்தியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருச்சியில் இருந்து இன்று தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஏராளமான தொண்டர்கள் விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்ததால் பிரச்சார வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. காலை 10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் சூழ்ந்ததால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

மக்கள் வெள்ளம்
பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், குழந்தைகளுடன், சிறுவர்களுடன் பெண்கள், பெரியவர்கள் என பலரும் வந்திருந்தனர். மக்கள் அலைகடலெனத் திரண்டிருந்ததால் பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு விஜயின் வாகனம் வந்து சேர மிகவும் தாமதமானது. காலை 10.30 மணிக்குத் தொடங்க வேண்டிய பிரச்சார உரை, மதியம் 2.30 மணிக்கு மேல் தான் தொடங்கப்பட்டது.
செய்தீர்களா...
அப்போது விஜய் பிரச்சார உரையைத் தொடங்கிப் பேசினார். அவர் பேசுகையில், திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா கேள்வி எழுப்பினார். திருச்சியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய திமுக அரசு என்ன செய்தது. மணல் அள்ளுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. ஸ்ரீ ரங்கத்தில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகம் உள்ள நிலையில் ஏன் சென்ட் தொழிற்சாலை அமைக்கவில்லை. 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
வாக்குறுதிகள் என்னாச்சு..
அரசு வேலை வாய்ப்புகளில் 40 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொன்னீர்களே அதை நிறைவேற்றினீர்களா. இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள் என்று அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுகிறார்கள். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வராது.
கிட்னி திருட்டு..
கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள். மோசமான கிட்னி திருட்டு விவகாரத்தை முறைகேடு என்கிறார். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காவரி நீர் பாயும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி கண்டறியாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
நிறைவேற்றினீர்களா?..
டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?.நீட் தேர்வு ரத்து, ஏழைகளுக்கு வீடு, 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே இதையெல்லாம் நிறைவேற்றினீர்களா? மக்களின் சத்தம் கேட்கிறதா? முதலமைச்சர் அவர்களே..
கல்வி, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை நாங்கள் இலவசமாக வழங்குவோம். நான் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சத்தியம் செய்கிறேன். அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications