சார் கோவிலில் என்ன வேண்டுனீங்க? கேஎன் நேரு சொன்ன பதில் தான் ஹைலைட்! குபீரென சிரித்த அன்பில் மகேஷ்
திருச்சி: ‛கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் கேஎன் நேருவிடம் வேண்டுதல் என்ன?' என திடீரென கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அருகே இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அனைவரும் சத்தமாக சிரித்தனர். இதையடுத்து கேஎன் நேரு சிரித்தபடி சொன்ன பதில் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு அமைச்சர் கேஎன் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கேஎன் நேரு பதிலளித்தார். இதுதொடர்பாக கேஎன் நேரு கூறியதாவது:
அண்ணாவின் பிறந்தநாள் விழாவையையொட்டி கழக தோழர்கள், மாவட்ட கழகங்கள் இணைந்து அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினோம். குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத்தொகை என்பது
ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு திருச்சியில் நாங்கள் இருவரும் (கேஎன் நேரு, அன்பில் மகேஷ்) வழங்குகிறோம். அதன்பிறகு சேலம் சென்று அங்கும் நான் வழங்க இருக்கிறேன்.
இதையடுத்து ‛‛ரூ.1000 உரிமைத்தொகை என்பது விடுபட்ட நபர்களுக்கு கிடைக்குமா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கேஎன் நேரு, ‛‛3 மாதம் அவகாசம் கொடுத்துள்ளனர். தகுதி இருந்தும் கிடைக்காமல் இருப்போர் மனு அளிக்க வேண்டும் என முதல் அமைச்சர் கூறியுள்ளார். மனு அளித்தவர்கள் தகுதியுடைவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும்'' என்றார்.
இதையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் அமலாக்கத்துறை சோதனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேஎன் நேரு, ‛‛இது நமக்கு சம்பந்தமா? தினமும் தான் இங்கு அது நடக்கிறதே?'' என கேட்டார். இதையடுத்து ‛‛கோவிலில் தரிசனம் செய்துள்ளீர்கள். வேண்டுதல் என்ன சார்?'' என கேள்வி கேட்டப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதும் அருகே இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட அனைவரும் சிரித்தனர். கேஎன் நேருவும் சிரித்தார்.
அதன்பிறகு சற்று யோசித்தபடி, ‛‛தொடர்ந்து திமுக என்பது தலைவர் ஸ்டாலின் தலைமையில் இருக்க வேண்டும். எத்தனை காலம் ஆனாலும் அவரே முதல் அமைச்சராக இருக்க வேண்டும். இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிகிட்டேன்'' என சிரித்தப்படி கூறிவிட்டு சென்றார். முன்னதாக கேஎன் நேரு, சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications