தூத்துக்குடியில் 1.5 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் சொத்து அபகரிப்பு.. ராணுவ வீரர் குடும்பம் கண்ணீர்
தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமைக்கு ஆளானதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ரூ.1.5 லட்சம் ரூபாய் கடனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும் கண்ணீர் மல்க வயதான தம்பதியினர் கூறினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் உள்பட பல்வேறு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 710 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.
இதனிடையே நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வந்த கழுகு மலையைச் சேர்ந்த வயதான தம்பதி, ரூ.1.5 லட்சம் ரூபாய் கடனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் வீட்டை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையைச் சேர்ந்த மணி, பிச்சம்மாள் தம்பதியின் மகன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மணி, பிச்சம்மாள் தம்பதி ஒருவரிடம் ரூ.1.5 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கினார்களாம்.. அந்த பணத்தையும், அதற்கு உரிய வட்டியையும் கொடுக்க தயாராக உள்ள தம்பதி, அதற்காக தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம் உள்ளிட் சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பிச்சம்மாள் கூறுகையில், "என் பேர் பெயர் பிச்சம்மாள், நாங்கள் தொழில் தொடங்க வேண்டி 1.5 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி இருந்தோம்.. என் இரண்டாவது பையன் இசக்கியப்பன் மிலிட்டரியில் வேலை பார்க்க போனான்.. ஆனால் கழுத்திலும், காலிலும் குண்டடி பட்டு இறந்து போனான். நாங்கள் வாங்கிய கடனை காட்டி வீட்டை காலி செய்ய சொல்லி, இடம் தான் வேண்டும் என்று பறித்துள்ளார்கள். எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை.. எந்த உதவியும் இல்லை.. இப்போது கடைசி காலத்திற்கு வந்துவிட்டோம்.. எங்கள் இடத்தை காப்பாற்றி கொடுங்கள்" என்று கூறினார்.
இந்நிலையில் மணி மற்றும் பிச்சம்மாள் தம்பதின் மூத்த மகன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் முன்பு கழுகு மலையில் தீப்பெட்டி தொழில் நடத்தி வந்தோம்.. தீப்பெட்டி தொழிலை மேம்படுத்த கோவில்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரிடம் ஒன்றரை லட்சம் கடன் வாங்கினோம்.. 4 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்தோம். தொழில் நஷ்டப்பட்டதன் காரணமாக வட்டியை கட்ட முடியவில்லை.. கம்பெனியை பூட்டிவிட்டோம்.. ஏற்கனவே கடன் கொடுக்கும் போதே சொத்தை அடமானம் எழுதி வாங்கியிருந்தார்கள். கடனை கட்ட முடியாததால் எங்கள் இரண்டு சொத்தையும் பறித்துக் கொண்டார்கள்.. எங்க தம்பி அப்போது போரில் இறந்தவிட்டார். அப்போது ஐந்து லட்சம் கிடைத்தது. அதை வைத்து கடனை அடைக்க முயற்சி செய்தோம்,.. ஆனால் அவர்கள் ஏற்கவில்லை.
இந்த விவகாரத்தில் கேஸ் போட்டோம்.. அதில் அவர்களுக்கு 3 மாத தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஏற்கவில்லை.. பணம் வாங்கியுள்ளீர்கள்.. சொத்து எங்களுக்குத்தான்,, காலி பண்ணுங்க என்று மிரட்டுகிறார்கள்.. மேலும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள்.. மனஉளைச்சலில் என் வயதான பெற்றோர் சாப்பிடவே மறுக்கிறார்கள். சொத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். அதற்கு வங்கி வட்டி போட்டு பணத்தை திரும்ப கொடுக்க தயாராக உள்ளோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications