'நான் ஐஏஎஸ் அதிகாரி'.. தூத்துக்குடி எஸ்பியிடம் பேசிய பெண்.. உடன் வந்து வசமாக சிக்கிய பாஜக பிரமுகர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளிக்க வந்த மங்கையர்க்கரசி என்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக வந்த பாஜக பிரமுகர் ரூபிநாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமையான நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் மங்கையர்க்கரசி என்ற பெண் ஒருவர் ரூபிநாத் என்பவரை அழைத்துக் கொண்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளித்தார். அப்போது அந்தப் பெண் 'தான் ஒரு ஐஏஎஸ் (IAS) அதிகாரி என்றும், உத்தரப்பிரேதசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மங்கையர்க்கரசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம், அந்த பெண் யார், ஐஏஏஸ் அதிகாரி தானா என்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மங்கையர்க்கரசி (44) என்பதும், கல்வித்துறை உதவி செயலாளர் என்று பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அப்போது அவருக்கு உடந்தையாக வந்தவர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் (42) என்பதும், இவர் பாஜகவில் திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவின் மாவட்டத் தலைவராகவும் இருந்து வருவது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மங்கையர்க்கரசி மற்றும் அவருடன் வந்த ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தார்கள். இதனிடையே இரண்டு வாரம் முன்பு தனது கணவருடன் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற மங்கையர்க்கரசி , துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்ததும் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன், இந்த இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்த தற்போது உத்தரவிட்டார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்பதும், போலியாக ஐஏஎஸ் அதிகாரி என பலரிடம் கூறி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை போலீசாரும் மங்கையர்க்கரசி மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் மங்கையர்கரசி மற்றும் பாஜக பிரமுகர் ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். இருவரும் யாரையாவது ஏமாற்றி உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications