தூத்துக்குடி ஏர்போர்ட்: மோடி நிகழ்ச்சியில்.. பாஜக - திமுகவினர் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் திடீர் பரபரப்பு
தூத்துக்குடி: ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி விமான நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சியில் பாஜகவினரும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மோடி வருகை தருவதற்கு முன்பாக பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் பதிலுக்கு ஸ்டாலின்.. ஸ்டாலின் என்று கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் விழாவில் சிறிது நேரம் பரபரப்ப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ள தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளம் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்திலும் விமானம் தரை இறங்குவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான முனையத்தில் 5 விருந்தினர்கள் அறைகள், பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுஉள்ளது.
புதிய முனையத்தின் 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்டர்களும் உள்ளன. விரிவாக்கம் செய்யபட்ட இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அரசு நிகழ்ச்சி என்பதால், இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள், டிஆர்பி ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினரும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மோடி வருகை தருவதற்கு முன்பாக பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்ரு கோஷமிட்டனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் பதிலுக்கு ஸ்டாலின்.. ஸ்டாலின் என்று கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் விழாவில் சிறிது நேரம் பரபரப்ப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications