விஜயின் தவெகவில் அதிகார போட்டி.. அஜிதாவா? பாலாவா? கோஷமிட்ட தொண்டர்களால் பரபரத்த தூத்துக்குடி
தூத்துக்குடி: குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்தபோது அதிகார போட்டியால் 2 குழுக்களாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வந்து போட்டி போட்டு கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியின் தந்தை என அழைக்கப்படுபவர் குரூஸ் பர்னாந்து. கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தூத்துக்குடி நகர் மன்ற தலைவராக செயல்பட்டார்.

தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு 1930ல் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல் அனைத்து சமுதாய மக்களையும் ஒரே இடுகாட்டில் அடக்கும் செய்து ஜாதி பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபட்டார்.
இதனால் தான் குரூஸ் பர்னாந்து தூத்துக்குடியின் தந்தை என்று போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் குரூஸ் பர்னாந்துவின் 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் குரூஸ் பர்னாந்துவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த வேளையில் தான் பரபரப்பான சூழல் உருவானது. அதாவது முதலில் பாலா என்பவரின் தலைமையில் தவெகவினர் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த வேளையில் தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் என்பவர் தலைமையில் மற்றொரு குழுவினர் மாலை அணிவிக்க வந்தனர். ஏற்கனவே மாலை அணிவித்துக் கொண்டிருந்த பாலா குழுவினர் கீழே இறங்காமல் மேலே நின்று கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் அஜிதா ஆக்னல் தரப்பு கீழே நின்று கொண்டிருந்தனர். அதன்பிறகு போலீசார் தலையிட்டனர்.
இதையடுத்து பாலா தரப்பினர் கீழே இறங்கினர். இதையடுத்து அஜிதா ஆக்னல் குழு மாலை அணிவித்தனர். ஆனாலும் பாலா குழுவினர் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷமிட்டனர். 'மாவட்டச் செயலாளர் பாலா வாழ்க' என தொடர் கோஷம் எழுப்பினர். தற்போது தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் பொறுப்பு பாலாவுக்கு வழங்கப்படவில்லை. ஆனாலும் அவரை மாவட்ட செயலாளர் என்று ஆதரவாளர்கள் கோஷமிட்டு அஜிதா ஆக்னல் தரப்பை டென்ஷனாக்கினர்.

தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை தற்போது தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்று மாவட்ட செயலாளர் இல்லை. அஜிதா ஆக்னல் மாவட்ட பொறுப்பாளராகவும், பாலா, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் 2 பேர் இடையே மாவட்ட செயலாளர் பதவியை பெற போட்டி உள்ளது. இருவருக்கும் இடையே இந்த விவகாரத்தில் அதிகார போட்டி நிலவும் நிலையில் அவர்கள் மாறி மாறி கோஷமிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications