விமர்சனத்துக்கு நடுவே.. தூத்துக்குடியில் திடீரென எடப்பாடியை பாராட்டிய ஸ்டாலின்! என்ன மேட்டர்?
தூத்துக்குடி: வரும் லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் முக ஸ்டாலின் தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்தில் இன்று பேசினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் கடுமையாக விமர்சித்தார். அப்போது திடீரென்று 2 மகிழ்ச்சியான விஷயம் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டியது கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி சிந்தலக்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். தூத்துக்குடி எம்பியும், தனது சகோதரியுமான கனிமொழி மற்றும் ராமநாதபுரம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான நவாஸ் கனியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தூத்துக்குடியில் மனிநேயமற்ற முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாட்டு வரலாற்றில் அதிமுகவால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. துயரமும், கொடூரமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்செல்லாம் பதறுது.
2019ல் எதிர்க்கட்சி தலைவராக வந்த நான் தூத்துக்குடிக்கு வந்தேன். ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் பற்றி ஊடகங்கள் கேட்டபோது உங்களை போல் நானும் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமின்றி கூறினார்.
உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பேசக்கூடிய பேச்சா என்று நாடே கொந்தளித்தது. அந்த அளவுக்கு பெரிய பொய்யை சொன்னார் பழனிச்சாமி.
ஒரு பழமொழி சொல்வார்கள். கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடிப்பார்கள் என்று. அந்த அளவுக்கு பெரிய பொய்யை பழனிச்சாமி சொன்னார். அவர் கூறிய பொய்யை அவரது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே கூறியது. நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் பழனிச்சாமி கூறியது பொய் என தெளிவாக வந்துள்ளது. பச்சைப்பொய் பழனிச்சாமி என்று எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் சும்மாவா சொன்னார்கள்?.
பழனிச்சாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சாட்சியமாக அப்போதைய தலைமை செயலாளர், டிஜிபி , அன்றாட நிகழ்வுகளை முதல்வருக்கு கொண்டு செல்லும் உளவுத்துறை ஐஜி ஆகியோர் சொன்ன சாட்சியங்கள் அடிப்படையில் தான் பழனிச்சாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ஆணையம் உறுதி செய்துள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு பொறுப்பேற்றதும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலின்படி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீதான 38 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் உதவி வழங்கப்பட்டது. 26.5.2021 அன்று உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு கடந்த ஆட்சியில் கண்துடைப்புக்காக பணி வழங்கப்பட்டது. ஆனால் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப 18 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக திறக்க முடியாத வகையில் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்து வெற்றி கண்டது இந்த திராவிட மாடல் அரசு தான். ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு இரக்கமின்றி எப்படி நடக்ககூடாது என்பதற்கு சாட்சி கடந்த ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி நடத்திய பழனிச்சாமி மக்கள் மறந்து இருப்பார்கள் என நினைப்பார். மக்களை ஏமாற்ற மீண்டும் பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளார்.
பாஜக, மோடி பற்றி பாசாங்கிற்கு கூட 10 சொற்கள் பேசாத எடப்பாடி தான் மாநில உரிமைகளை மீட்கப்போகிறாராம். பழனிச்சாமி அவர்களே மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள் தான். திமுக, அதிமுகவிற்கு போட்டி என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அவருக்கு அந்த அளவிற்காவது புரிதல் இருப்பது மகிழ்ச்சி. மேலும் என்னை பற்றி அவதூறுகள் பரப்பி, விமர்சித்து என்னை எஃகு போல் நெஞ்சுறுதி கொண்டவனாக மாற்றியுள்ளார்களோ, அதேபோல் தற்போது உதயநிதியையம் விமர்சிக்க தொடங்கி உள்ளார். இது 2வது மகிழ்ச்சியான விஷயம் '' என்றார்.












Click it and Unblock the Notifications