நெகிழ வைத்த திருச்செந்தூர்.. கடலில் திடீரென மாயமான வைர கைச்செயின்! கடைசியில் நடந்த அதிசயம்.. முருகா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை தரிசிக்க சென்ற திருவள்ளூரை சேர்ந்த பெண்ணின் ஒன்றரை லட்சம் மதிப்பிலான வைர கைச்செயின் அலையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பெண் கண்கலங்கிய நிலையில் அடுத்த சிறிது நேரத்தில் பெரும் அதிசயம் நிகழ்ந்ததோடு, அவர் கையில் இருந்து நழுவி சென்ற கைச்செயின் அவரிடமே வந்து சேர்ந்ததால் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இது இரண்டாம் படை வீடாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அங்குள்ள கடலில் புனித நீராடி கோவிலில் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இப்படியாக கடலில் புனித நீராடும் போது ஆண்கள், பெண்கள் அணிந்திருக்கும் தங்கநகைகள் மிஸ்ஸாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் தான் அப்படியொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே அந்த நகை அந்த மீண்டும் கிடைத்த அதிசயம் நடந்துள்ளது.
அதாவது திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி சாரா. இந்த தம்பதியின் மகள் கல்பனா. இவர்கள் குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூர் வந்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் புனித நீராடினார்கள். அப்போது கல்பனா தனது கையில் வைக்கல் பதித்த கைச்செயினை அணிந்திருந்தார். திடீரென்று அந்த கைச்செயின் மிஸ்ஸானது.
இதனை பார்த்த கல்பான அதிர்ச்சியடைந்தார். கடல் அலையில் வைர கைச்செயின் அடித்து செல்லப்பட்டதை உணர்ந்த அவர் தனது குடும்பத்தினரிடம் கூறி கண்கலங்கினார். ஏனென்றால் அந்த வைர கைச்செயினின் மதிப்பு என்பது ஒன்றரை லட்சம் ரூபாயாகும். இதையடுத்து குடும்பத்தினர் அங்கிருந்த கடற்படை பாதுகாவலரிடம் சம்பவம் பற்றி தெரிவித்தனர்.
இதையடுத்து கடற்படை பாதுகாவலர்கள், சிப்பி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் சேர்ந்து வைர கைச்செயினை தேடிப்பார்த்தனர். சிறிது நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வைர கைச்செயின் அவர்களிடம் சிக்கியது. அதனை அவர்கள் போலீசார் முன்னிலையில் கல்பனாவிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்று கொண்ட அவர் மகிழ்ச்சியடைந்தார். மேலும் திருச்செந்தூர் கடலில் மிஸ்ஸான வைர கைச்செயினை தேடிக்கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் முருகனை தரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.
திருச்செந்தூர் கடலில் மிஸ்ஸாகும் நகைகள் மீண்டும் கிடைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க சங்கிலியை குளிக்கும்போது கடலில் விட்டுவிட்டார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடிய நிலையில் கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்து அவரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications