காரோடு வாலிபரை அடித்துச் சென்ற வெள்ளம்.. கரண்ட் கம்பி அறுந்து தொங்குகிறது.. வெள்ளத்தில் தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளாலங்கோட்டை பகுதியில் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாமிரபரணி ஆறு மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவியது. இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. கயத்தாறு, உப்பாறு ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள சாலைகளில் ஓடியதால் போக்குவரத்து தடைபட்டது.
இந்நிலையில், வெள்ளாலங்கோட்டை ஊருக்கு கிழக்கே உள்ள உப்பாற்றில் தாம்போதி பாலத்தில் மழை வெள்ளத்தில், தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்த தனது காரோடு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். இதில், கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த சீமைக் கருவேல மரத்துக்கிடையே கார் சிக்கிக் கொண்டது.
காரில் இருந்து தப்பிக்க முடியாமல் மனோஜ்குமார் போராடிக் கொண்டிருந்தார். தன்னைக் காப்பாற்றும்படி சப்தம் போட்ட நிலையில், இதைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலமாக சீமைக் கருவேல மரங்களை அகற்றி மழை வெள்ளத்தில் காருடன் சிக்கிக் கொண்டிருந்த மனோஜ் குமாரை மீட்டனர். இதைத்தொடர்ந்து, தீயணைப்புத் துறை மூலமாக காரும் மீட்கப்பட்டது.
பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி தாலுகாவில் உள்ள 40 கன்மாய்களும் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது. அந்த வகையில் மூப்பன்பட்டியில் உள்ள இரண்டு கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள 1 மற்றும் 2வது தெருவில் 100 வீடுகளுக்கு மேல் மழைநீர் புகுந்து வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வாழை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழைத் தோட்டங்களில் தண்ணீர் உட்புகுந்ததால் வாழைப் பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால், வாழை விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால், தூத்துக்குடியில் உள்ள நிகிலேசன் நகர் வள்ளலார் கோயில் பின்புறம் இருந்த மரம் ஒன்று சாய்ந்துள்ளது. அந்த மரம் அப்பகுதியில் உள்ள மின்சார ஒயரின் மீது சாய்ந்தபடி தொங்கிக் கொண்டு இருக்கிறது. மழை பெய்யும் இந்த நேரத்தில் மின்சாரம் தண்ணீர் வழியாக கீழே இறங்கினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியுடன் பார்த்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications