திருச்செந்தூர் போறீங்களா? வெறும் ரூ.100 செலவில் அரசு சொகுசு விடுதியில் தங்கலாம்! நோட் பண்ணுங்க
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக செலவில் தங்குவதை விட இனி வெறும் ரூ.100 செலவில் அரசு சொகுசு விடுதியில் தங்கலாம். இதற்கான முன்பதிவு என்பது அக்டோபர் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கடலில் குளித்து முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கும்பாபிசேகத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலில் புனரமைப்பு பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புனரமைப்பு பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடக்கும் புனரமைப்பு பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக ரூ48.36 கோடி செலவில் லாட்ஜ் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு கோவில் தெப்பக்குளம் புனரமைப்பு, வேதிக் பள்ளி, செயற்கை நிருற்றுகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
தற்போது கட்டப்பட்டுள்ள பக்தர்களுக்கான விடுதியில் மொத்தம் 100 அறைகள், 20 சிறப்பு அறைகள், ரெஸ்டாரண்ட் வசதிகள் உள்து. இந்த கந்தசஷ்டி விழாவையொட்டி இந்த அறைக்கான முன்பதிவு என்பது அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கஉள்ளது. இந்த விடுதிக்கான கட்டணம் என்பது தனியார் லாட்ஜை விட குறைவாகும்'' என்றார்.
இந்நிலையில் தான் பக்தர்களுக்கான தங்கும் விடுதி குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது கந்தசஷ்டி திருவிழா, அதனை தொடர்ந்து நடக்கும் சூரசம்ஹாரம் ஆகியவை நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் தங்க உள்ளனர். பொதுவாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தனியார் விடுதிகளில் தங்குவார்கள்.
ஆனால் தற்போது அரசு சார்பில் விடுதி கட்டப்பட்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த விடுதியில் தனியார் விடுதியை ஒப்பிடும்போது கட்டணம் மிகவும் குறைவாகும். அதாவது 2 பேர் தங்கக்கூடிய சாதாரண அறைக்கு ரூ.500, ஏசி அறைக்கு ரூ.750, அதோடு 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. அப்படி பார்த்தால் ஒருவருக்கு ரூ.100 என்ற அளவில் மட்டுமே கட்டணம் இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications