திருப்பதிக்கே டஃப் கொடுத்த நம்ம திருச்செந்தூர் முருகன்.. கோடிகளை கொட்டிய பக்தர்கள்! அள்ள அள்ள தங்கம்
தூத்துக்குடி : திருப்பதிக்கு இணையாக தமிழகத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பல கோடிகளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக வசூலான உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், ரூ.5.15 கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு.
கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலா கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்கிறது. அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம்.

இதனால் கோவிலை புனரமைத்து, பக்தர்களுக்கு ஏராளமான வசதிகளை செய்து தர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அரசு பங்களிப்பு 100 கோடி, தனியார் பங்களிப்பு 200 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. திருப்பதி கோயிலுக்கு இணையாக வளர்ச்சிப் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், உண்டியல் காணிக்கையும் தற்போது திருப்பதிக்கு இணையாக கொட்டுகிறது.
திருவிழா நாட்களில் மட்டுமே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில் தற்போது பௌர்ணமி நாட்களில் கூட லட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

இதையடுத்து, செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்றும் இன்றும் (23, 24-09-2024) கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கண்காணிப்பாளர் கோமதி, மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

முதல்நாள் காணிக்கை எண்ணப்பட்டதில் 4 கோடியே 34 லட்சத்து 72 ஆயிரத்து 955 ரூபாயும், இரண்டாம் நாள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையானது 81 லட்சத்து 16 ஆயிரத்து 879 ரூபாயும் மொத்தம் 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதேபோல், தங்கம் 2,352 கிராமும், வெள்ளி 41,998 கிராமும், 1589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அதே போல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1,67,860 ரூபாயும், கோசலை பராமரிப்புக்காக 82,722 ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications