டோல்கேட்டில் வாகனங்கள் பணம் தர வேண்டாம்.. டிசம்பர் 31 வரை விலக்கு! அறிவித்தார் தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடி: டிசம்பர் 31ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மழை வெள்ள நிவாரண பொருட்கள் வரும் நிலையில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்கி மாவட்ட கலெக்டர் லட்சுமபதி உத்தரவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சில இடங்களில் கால்நடைகள் உயிரிழந்தன. பல கிராமங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதுதவிர வீடுகள் இடிந்துள்ளன. மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை இல்லாத நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வடிந்துள்ளது. இருப்பினும் ஏரல் மற்றும் அதனை சுற்றிய சில இடங்களில் மழை வெள்ள பாதிப்பு உள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினர். மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
அதோடு மத்திய குழு தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கீடு பணியை தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க நாளை மறுநாள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். இதற்கிடையே தான் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தொங்கிய தண்டவாளம்.. செந்தூர் எக்ஸ்பிரஸை நிறுத்தி 800 உயிரை காப்பாற்றியது இவர்தான்! ரயில்வே பாராட்டு
இதன் காரணமாக டிசம்பர் 31ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமபதி தெரிவித்துள்ளார். அதாவது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களை சிரமமின்றி எடுத்து செல்ல வசதியாக இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications