ஊசி போட்டு கொன்னுவிடுவதாக மிரட்டி.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விளாத்திகுளத்தில் போலி டாக்டர் கைது
தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் குழந்தையின் சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் ராபின்சன். விளாத்திகுளத்தில் 'பத்மநாபன் ஆஸ்பத்திரி' எனும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று மதியம் சென்றுள்ளார்.
அப்போது அந்த டாக்டர் சிகிச்சை அளிப்பது போல் பெண்ணுக்கு மருத்துவர் ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் மருத்துவமனையில் நடந்தவற்றை இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலையம் சென்று மருத்துவர் ராபின்சன் மீது புகார் அளித்தனர். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 506(ii) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டு உள்ள ராபின்சன் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு போலியாக மருத்துவம் பார்த்ததாக கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் சித்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்று விட்டு, ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுக்கொண்டும், மாத்திரை வழங்கியும் மக்களுக்கு சிகிச்சை அளித்த வந்துள்ளார். இதன் காரணமாக அப்போது அவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தையின் சிகிச்சைக்காக வந்த பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமல்லாமல் இது பற்றி வெளியே கூறினால் ஊசி போட்டு கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications