வீடு வீடாக கதவை தட்டி.. இதுதான் தமிழகம்.. தூத்துக்குடியில் "மிதந்த" மனிதநேயம்..திடீர்னு மேயர் அதிரடி
தூத்துக்குடி: மழை வெள்ள பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது தூத்துக்குடி.. இங்கு நிவாரண பணிகளும் வேகம் எடுத்து வரும்நிலையில், தன்னார்வலர்களுக்கு, மாவட்ட மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதுவரை வரலாறு காணாத மழையில் தூத்துக்குடி சிக்கிவிட்டது.. இதனால், தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன.. சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால்தான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

தூத்துக்குடி: பிறகு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். முகாம்கள் தவிர, கோவில்களில், மசூதிகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்..
தன்னார்வலர்கள்: அரசு தரும் நிவாரண பொருட்கள் பல இடங்களில் முழுமையாக கிடைக்காத சூழலும் உள்ளது.. அல்லது போதுமானதாக இல்லாமலும் இருக்கிறது.. இதுபோன்றவர்களுக்குதான், தன்னார்வலர்கள் இறங்கி உதவி செய்து வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரல், கேம்பலாபாத், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இதற்காகவே வாட்ஸ்அப் க்ரூப் ஒன்றை தொடங்கி, உணவு தயாரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள்..
உணவு பொட்டலங்கள்: ஆனால், உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதே பெரும் சவாலாக உள்ளது.. காரணம், இங்குள்ள பிரதான சாலைகளில் வெள்ளநீர் வடியவில்லை.. அதனால், சரக்கு வாகனம் எடுத்துக் கொண்டு, பலமணி நேரம் பயணம் செய்து, சந்தைகளில் காய்கறிகளை வாங்கி வரவேண்டி உள்ளது. ஒருபொது இடத்தில் வைத்து, சாப்பாடு செய்து, உணவுப்பொட்டலங்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டி நேரிடுகிறது..
நிறைய தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால், அதில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால், தன்னார்வலர்கள், ட்ரை சைக்கிள் என்று சொல்லப்படும் மூன்று சக்கர வாகனத்தில், உணவு பொட்டலங்கள், பால் பாக்கெட், பிஸ்கட், பிரட், தண்ணீர் பாட்டில் போன்றவைகளுடன் வெள்ளநீரில் சென்று, வழங்கி வருகிறார்கள்.
துண்டிப்பு: அதாவது, முகாம்கள், திருமண மண்டபங்கள், மசூதிகள், கோயில்களில் தங்கியிருப்பவர்களை தவிர, சாலைகள் துண்டிப்பால் கிராமங்களில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கும், இந்த உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பாடு தயாராகிறது..
சில வீடுகள், புறநகர் பகுதிகளில் உள்ளதால், அங்கேயும் வீடு வீடாக சென்று நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.. கடந்த 5 நாட்களாகவே, சாதி, மத வேறுபாடுகளை களைந்து, "மனிதநேயத்தை" மட்டுமே முன்வைத்து, கோவில்களிலும், மசூதிகளிலும் தங்கியுள்ளவர்களுக்கு ஓடோடி உதவி கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள்..!

கனமழை: இந்நிலையில், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகியோர் மேற்பார்வையில் அகற்றப்பட்டு வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் சிலர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கிவிட்டு செல்வதால், மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கும் நிலை உள்ளது. மாநகாட்சி பகுதியில் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கவும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications