தூத்துக்குடியில் ஆகஸ்டு 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய பெருவிழாவையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 442வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 10ஆம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் வெளிநாட்டு, வெளிமாநில இறைமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். தூத்துக்குடி மாநகரமே களைகட்டும்.
இந்த நிலையில் தான் 10 ஆம் நாளான ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறுகையில், "தூத்துக்குடி பனிமயமாதா பெருவிழாவையொட்டி வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications