குலசை கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு பாடம் புகட்டிய அறநிலையத்துறை.. அதிரடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயில் அருகே சப்பரம் மண்டபத்தையொட்டி ரூ. 1 கோடி மதிப்பிலான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தனர். இடத்தை மீட்க கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் சட்ட விரோதமாக நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றை மீட்க உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயிலுக்கு சொந்தமான இடங்களை பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமித்து வைத்து இருப்பதையும் பல முறை எச்சரித்தும் காலி செய்யாமல் இருக்கும் நிலையையும் பார்க்க முடிகிறது.

சமீப காலமாக இந்து சமய அறநிலயத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கோண்டு கோவில் நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோவில் நிலம் என்றால், அறநிலையத்துறை நிச்சயம் என்றாவது ஒரு நாள் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தாலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா பண்டிகையின் போது குலசை கோவிலுக்கு விரதமிருந்து வேடம் கட்டி காணிக்கை செலுத்துவார்கள். பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமாக பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.
கோயில் அருகே சப்பரம் மண்டபத்தையொட்டி ரூ. 1 கோடி மதிப்பிலான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தனர். இந்த இடத்தை மீட்க கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த இடம் கோவிலுக்கு சொந்தம் என உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி, இடத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி நேற்று தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் நீதிமன்றம் உத்தரவின்படி, கோயில் இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அந்த இடத்தை அதிகாரிகள் மீட்டு, கோயில் கணக்கில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications