நிவாரண பொருட்களை வாங்கி விற்பவர்களும் இருக்கிறார்கள்.. ஜாக்கிரதையாக நல்லது செய்யவேண்டும்: கமல்ஹாசன்
சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நிவாரண உதவி புரியும் மநீம நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் இருந்து அனுப்பி வைத்தார். 3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில், இது நற்பணி மையமாக இயங்கிக்கொண்டிருந்தது. தேடித் தீர்ப்போம் வா என்பதுதான் எங்களுடைய குரலாக இருந்தது. பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், மநீமவினர் இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதை தினமும் செய்வதையே வாழ் முறையாக கொண்டவர்கள். எனவே, அவர்கள் செய்து வரும் உதவிகளை தெரியப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை.
மநீம சார்பில் முதற்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மக்களுக்காக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதை திருநெல்வேலி மநீம மண்டல செயலாளர் ஒருங்கிணைத்தார். தற்போது லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324-எம் உடன் இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகள் இன்று 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை வெள்ள சேதத்தின்போது, மனிதநேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென் மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். மநீம சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று லாரிகள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்படும். உதவி தேவை இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நிர்வாகிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உதவி செய்யும்போது ஓடிப் போய் தடுக்கி கீழே விழுந்துவிடாமல், நாம் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, உதவி செய்யப் போகும்போது, உணர்ச்சிவசப்படுவதைவிட, திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டும். உதவி செய்ய போகும் இடத்தில் பொருட்களைத் தூக்கி எறிவதன் மூலம், ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, அதுபோன்ற தவறுகள் இல்லாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்பதால்தான் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.
இந்த உதவி கட்சி வரைகோடுகளுக்கு அப்பாற்பட்டது. மனிதநேயம் சார்ந்தது. எனவே, அதிகாரிகளுடன் கலந்து பேசி, எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்து அங்கு சென்று உதவ வேண்டும். தற்போது தூத்துக்குடியில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. எனவே, உதவி தேவைப்படுகிறவர்களுக்கு சரியாக உதவி சென்றுசேர வேண்டும்.
இதில் கிடைக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கி அதையும் விற்பனை செய்யும் ஆட்களும் இருக்கின்றனர். எனவே, நாம்தான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்கும் வகையில் நாமே முன் நின்று கொடுக்க வேண்டும். நல்லது செய்வதாக இருந்தாலும் அதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
