தூத்துக்குடியை குறி வைக்கும் கனிமொழி... ராஜ்யசபா எம்.பி பதவி முடிவதால் தேர்தல் வியூகம்!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவதால் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Recommended Video

சென்னை : திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட கனிமொழி விரும்புவதாக தகவல்கள் .
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. மாநிலங்களவை உறுப்பினரை எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும், இதன்படி கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2013 ஜூலை மாதத்தில் எம்பியாக பொறுப்பேற்றார்.
கனிமொழி எம்பியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அவர் தேர்தலை சந்தித்து மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புவதாக திமுக தலைமையிடம் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

மக்களை சந்திக்க
மாநிலங்களவைக்கு எம்பியை தேர்ந்தெடுக்க திமுகவில் போதுமான அளவு எம்எல்ஏக்களின் பலம் இல்லாததும் கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. மாநிலங்களவை எம்பியாக இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒரு அரசியல்வாதி என்றால் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும். சிறந்த அரசியல்வாதியாக ஒருவர் இருக்க வேண்டுமானால் வாக்காளர்களின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே கனிமொழி லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓகே சொன்ன திமுகவினர்
தூத்துக்குடி கழக கண்மணிகளும் கனிமொழி இந்த தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என்று தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கனிமொழியைப் போலவே முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகை தொகுதி வலதுசாரிக்கா?
நாகப்பட்டினம் தொகுதியில் நன்கு அறிமுகமான ஏ.கே.எஸ்.விஜயன் திருத்தி தொகுதியின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சியான வலது சாரிக்கு ஒதுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இவை அனைத்தும் வியூகங்களே தவிர கட்சித் தலைமை இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

மாற்றம் ஏற்படும்
திருச்சியில் மக்களுக்கு அறிமுகமான ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே விஜயன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கரூர் தொகுதி பொறுப்பாளராக இந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் கரூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று சொல்ல முடியாது, தேர்தல் வேட்பாளர்கள் பற்றி முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்று கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூகம் வெற்றி தரும்
லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களில் திமுக போட்டியிட விரும்புகிறது, கூட்டணி கட்சிகளுடனும் சுமூக முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்ய விரும்புவதாக திமுக மூத்தத் தலைவர் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது, மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைப்பதற்கான 75 சதவீத பணிகளை அந்தக் கட்சி செய்து முடித்துள்ளது. தேர்தல் பணிகளை சிறப்பாக திட்டமிட்டு செய்து வருகிறோம், நிச்சயமாக எங்களின் தேர்தல் வியூகங்கள் வெற்றியை பெற்றுத் தரும் என்று கட்சியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications