தென் மாவட்ட இளைஞர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! கனிமொழி எம்.பி. கொடுத்த புதிய நம்பிக்கை!
தூத்துக்குடி: தென் மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கோ அல்லது வேறு மாநிலங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை என்ற சூழல் விரைவில் உருவாக்கித் தரப்படும் என உறுதியளித்திருக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.
தென் தமிழகத்தில் உலக அளவிலான பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என்ற நற்தகவல் ஒன்றையும் வெளியிட்டு தென் மாவட்ட இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார்.
தென் மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னை, திருப்பூர், மஹாராஷ்டிரா, குஜராத், என பல இடங்களுக்கு வேலை தேடிச்செல்வது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, தென் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் விரைவில் தென் மாவட்ட இளைஞர்களுக்கு தென் தமிழகத்திற்குள்ளேயே வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மிகுந்த நம்பிக்கை
இதேபோல் உலக அளவில் தென் தமிழகத்தில் பர்னிச்சர் பூங்கா ஒன்று நிறுவப்படும் என்று உறுதியையும் அளித்தார். கனிமொழி எம்.பி.யின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பர்னிச்சர் பூங்கா என்றால் அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற முடியும். இதனால் கனிமொழியின் இந்த அறிவிப்பு தென் மாவட்ட இளைஞர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மட்டுமல்ல
தாம் தூத்துக்குடி எம்.பி. என்பதால் அங்கு மட்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்காமல் தென் தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து பகுதி மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதேபோல் மீன் பிடித் தொழில் மேம்பாட்டுக்காக எண்ணற்ற புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதை பட்டியலிட்டு பேசி சுட்டிக்காட்டினார்.

மக்கள் மறக்கமாட்டார்கள்
தூத்துக்குடிக்கு பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு நிறைய செய்திருக்கிறோம் என பேசிவிட்டு சென்றதாகவும் அவர் என்ன செய்தார் என்பதை யார் மறந்தாலும் சரி தூத்துக்குடி மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அவரது ஆட்சியில் அப்பாவிகளை சுட்டுக்கொன்றதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என கனிமொழி சாடினார்.












Click it and Unblock the Notifications