எனது தந்தை பார்க்காத வெற்றியும் இல்லை -தோல்வியும் இல்லை! குட்டி ஸ்டோரி சொன்ன கனிமொழி!
தூத்துக்குடி: தனது தந்தை கருணாநிதி பார்க்காத வெற்றியும் இல்லை -தோல்வியும் இல்லை என்றும் தோல்வி வரும் பொது அவர் என்றுமே துவண்டுபோனது இல்லை எனவும் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் உள்ள புனித வளன் மேல் நிலைப்பள்ளி வெள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறினார். இதனிடையே கனிமொழி எம்.பி. பேசியதாவது;

''என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அவர் வாழ்க்கையில் பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. தோல்வி வரும் பொது அவர் என்றுமே துவண்டுபோனது இல்லை. ஒரு தேர்தல் தோல்வி பிறகு அது நாள் அடுத்த வேலை என்ன, அடுத்த தேர்தலுக்கான பணி என்ன? என்று தான் சிந்திப்பதைத் தவிர, இந்த தேர்தல் முடிவு என்பது நமக்கு ஏற்றதாக இல்லை, மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. அதனால் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டார்.
தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரமான ஒன்று இல்லை. உங்கள் திறமை எதிலே இருக்கிறது என்று புரிந்து கொண்டு இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும் என்ற முழு மனதோடு நீங்கள் அதைச் செய்தல், நிச்சயமாக அத்தனை பேரும் வெற்றி பெற முடியும்.
ஒரே ஒரு கதை அவருடைய வாழ்க்கையிலிருந்து, அவருடைய பள்ளி நாட்களில் திருவாரூரில் படித்தார். அங்கே கோவிலில் ஒரு பெரிய குளம் இருக்கிறது,அந்த குளத்தில் நடுவில் ஒரு மண்டபம் இருக்கும் அந்த குளம் மிகவும் பெரிய குளம் அந்த குளத்தின் நடுவில் இருக்கக்கூடிய மண்டபத்திற்கு நிறையப் பேர் நீந்திப் போக ஆசைப்படுவார்கள். பொதுவாகப் படகில் போவார்கள், என் என்றால் அவ்வளவு தூரம். ஒரு நாள்,கலைஞரும் அவருடைய நண்பர் தென்னன் (பள்ளிப் பருவ நண்பன்) இருவரும் கடைசி வரைக்கும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் ஒரு நாள், அந்த குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்திற்கு நீந்திப் போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பாதி தூரம் நீந்தி வந்து விட்டார்கள். நீண்ட தூரம் நீந்தியதால் இருவரும் களைத்து விட்டார்கள். தென்னன் அவர்கள் கலைஞர் அவர்களிடம், நாம் திரும்பிப் போய்விடலாம் என்று கூறினார்.

கலைஞர் அவரிடம், பாதி தூரம் வைத்துவிட்டோம். மீதி பாதி தூரம் தான் இருக்கிறது. திரும்பி போகும் அதே தூரம், நாம் நீந்தினால் மண்டபத்தைச் சேர முடியும். திரும்பிப் போகிறோம் என்றால் கரைக்குத் தான் போக முடியும். ஆனால் அந்த மீதி தூரம் கடந்து விட்டால் நம் நம்முடைய இலக்கை தொட்டவராக மாறி விடுவோம். இருவரும் அந்த மண்டபத்தை அடைந்து,சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத் திரும்பி வந்தார்கள்.
நான் என் வாழ்க்கையில் அவரிடம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் .அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். திரும்பப் போவது, விட்டு விடுவது என்பதை இந்த நொடியிலிருந்து உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள். நீங்கள் நினைக்கக்கூடிய எல்லையை, இலக்கை நிச்சயமாக அடைந்த தீர்வுகள் என்ற தன்னம்பிக்கையோடு நீங்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் வெற்றி என்பது உங்கள் கைகளில் இருக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடும்.''












Click it and Unblock the Notifications