Kulasai Dasara: குலசை முத்தாரம்மன் கோயில்.. தசரா திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது.. குவியும் பக்தர்கள்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முத்தாரம்மன் கோயிலில் இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரன்பட்டினம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. நாட்டில் மைசூருவுக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

குலசை தசரா திருவிழா
பக்தர்கள் பல்வேறு வேடங்கள் இட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் மட்டும் இல்லாமல் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். தசரா குழுக்கள் அமைத்து காணிக்கை பெற்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு நடைபெறும் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனையும் நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் விழா
இதையடுத்து விரதமிருக்கும் பக்தர்கள் கோயில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள். 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
முதல் நாள், அதாவது 1ஆம் திருவிழா அன்று இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2ஆம் திருவிழா நாளில் இரவில் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும், 3ஆம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4ஆம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் அம்பிகை எழுந்தருள்வார்.
மகிஷாசூரசம்ஹாரம்
5ஆம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6ஆம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7ஆம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8ஆம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9ஆம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும், 10ஆம் நாள் மகிஷனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கும்.
10ஆம் திருநாளான அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11ஆம் திருநாளான 3ஆம் தேதி மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12ஆம் திருநாளான 4ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
தசரா திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளன. வாகனங்களை நிறுத்த தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications