107 சவரன் நகை கொள்ளை சம்பவத்தில் 7 பேர் கைது.. சிறையில் இருந்தபோது திட்டம் தீட்டியது அம்பலம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தபோது நகையை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கீழமலையன் தெருவைச் சேர்ந்தவர் ஞானமுத்து பட்டர். இவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.

பிரியா தனது கணவர் ஞானமுத்து இறந்த 10 நாட்களுக்கு பிறகு சடங்குகளை முடித்து விட்டு திருநெல்வேலியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த வாரம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதற்குள் இருந்த தங்கம், வெள்ளி, வைரம் என மொத்தம் 107 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியா, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பின்பக்க சுற்றுச்சுவர் வழியாக கொள்ளையர்கள் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது தலைமையில், நண்பர்கள் சுந்தர், இசக்கிமுத்து, பட்டுத்துரை, இவரது தம்பி சின்னமருது, மணப்பாடு மரியசேசன், தூத்துக்குடி மாரிமுத்து ஆகிய 7 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் 7 பேரையும் கைது செய்து குலசேகரன்பட்டினம் போலீசார் நகை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த சின்னத்துரை ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்பில் இருந்து சிறையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூத்துக்குடி மாரிமுத்துவும் அதே சிறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டம் தீட்டி திருட முயற்சித்துள்ளனர்.
அப்போது ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்ட சின்னத்துரை கடந்த 8 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் அர்ச்சகர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் நகை பதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு 80 சவரன் நகையை மீட்டு இன்று மாலை கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications