மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
தூத்துக்குடி: தமிழகத்தில் 2 மாதங்களில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவதுறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் 25-ம் தேதி, 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியவதாவது: தமிழகத்தில் மருத்துவர், செவியர், மருத்துவம் சார்ந்த 4,308 பணியாளர்களை நியமனம் செய்வது குறித்து முதலமைச்சர் உத்தரவின்பேரில் அதற்கான தேர்வுகள், நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதத்தில் இந்தத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்.

காய்ச்சல் சிறப்பு முகாம்கள்
தமிழகத்தில் அதிகப்படியாக காய்ச்சல் இருக்கக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பரவக்கூடிய காய்ச்சல் என்பது கட்டுக்குள்தான் உள்ளது. தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சல், பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

மருந்து தட்டுப்பாடு - புகார் எண்
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும். எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ, அந்த இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

25-ம் தேதி தடுப்பூசி முகாம்
இந்த மாதம் 30-ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதி, தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது

பள்ளிகளில் தடுப்பூசி
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள் என 1,133 மருத்துவ மையங்களில் வரும் புதன்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும். 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் 4-ம் தேதி, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications