நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு அரசு சம்பளம்.. தூத்துக்குடியில் சீமான் பேச்சு
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மீன்பிடி தொழிலை அரசே மேற்கொள்ளும். மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும். பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பனை சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து அங்கு பணிபுரிபவர்களை அரசு பணியாளர்களாக அமர்த்துவேன் என்று சீமான் பேசினார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதேபோல் அரசியல் தலைவர்களும் நாலாபுறமும் பிரசாரம் செய்து வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக, அதிமுக, பாஜகவுக்கு போட்டியாக தனியாக களம் இறங்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி நேற்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரொவினா ரூஸ்ஜேனை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அந்த கடையில் சாப்பாடு நல்லா இருக்கும் என்று நாம் தேடிப்போய் சாப்பிடுவது போல், அடுத்த 5 ஆண்டுகாலம் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் தலைவனை ஒருமுறை யோசித்து தேடுங்கள். நம்ம காமராஜர் சொல்வது போல நல்ல மனிதர்களை பார்த்து ஓட்டு போடுங்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மீன்பிடி தொழிலை அரசே மேற்கொள்ளும்.
மேலும், மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும். நமக்கு இப்போது கிடைப்பது எல்லாம் சாதாரண சாளை போன்ற மீன்கள் தான். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள மக்களும் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களை சாப்பிடக்கூடிய நிலையை உருவாக்குவோம்.
ஒருமுறை எங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி பாருங்கள். தமிழக அரசியலை ஒற்றை ஆளாக நான் கதறவிடுவது போல, அங்குள்ள மொத்த பேரையும் கதறவிடுவேன். இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் இல்லை. வீழ்ச்சி திட்டம். மூன்றாவதாக வந்த உங்கள் மகன்கள் முதலிடத்திற்கு வருவது உங்கள் கையில் தான் இருக்கிறது.
7 சதவீதம் வாக்கு வைத்து இருந்த எனக்கு சின்னம் ஒதுக்கப் படவில்லை. ஆனால் 0.7 சதவீதம் வாக்கு வைத்து உள்ள தமாகாவுக்கு அவங்க கேட்ட சைக்கிள் சின்னம் ஒதுக்கியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். எங்களை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், ராமநாதபுரத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபாலை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது சீமான் கூறுகையில், "பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பனை சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து அங்கு பணிபுரிபவர்களை அரசு பணியாளர்களாக அமர்த்தி வறுமையை ஒழிப்பேன்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications