நாய் கடிக்கல, நகம் தான் கீறியது.. அலட்சியம் காட்டிய தூத்துக்குடி சுமதிக்கு சாப்பிட கூட முடியல.. ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. செல்லப் பிராணிகள் மீது நாம் காட்டும் அன்பு சில நேரங்களில் விழிப்புணர்வு இல்லையெனில் பேராபத்தாய் முடிந்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒட்டப்பிடாரத்தில் நடந்துள்ளது. தான் ஆசையாகப் பால் ஊற்றி வளர்த்த நாய் குட்டியின் நகம் கீறியதை சாதாரண காயமாக கருதிய குடும்பத்தலைவி ஒருவர், முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். முருகனின் மனைவி சுமதிக்கு 47 வயதாகிறது..

சுமதிக்கு சாப்பிட கூட முடியல
இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சுமதிக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில் தனது வீட்டில் சிறிய நாய் குட்டி ஒன்றை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த நாய் குட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நாய் சோர்வாக இருந்ததைக் கண்டு கவலையடைந்த சுமதி, அதற்குச் சிகிச்சை அளிக்க எண்ணி அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனையின்போது, எதிர்பாராத விதமாக அந்த நாய் குட்டி சுமதியின் தோள்பட்டை பகுதியில் தனது கூர்மையான நகங்களால் பலமாக கீறியுள்ளது.
வலி இல்லை, தடுப்பூசியும் போடல
காயம் பட்டவுடன் சுமதி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.. பொதுவாக நாய் கடித்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும், நகம் பட்டால் ஒன்றும் ஆகாது என்ற தவறான எண்ணம் அவரிடம் இருந்துள்ளது.
அதுவும் இல்லாமல், அந்த நாய் குட்டிக்கு ஏற்கனவே உரியத் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்ததால், தனக்கு எந்தப் பாதிப்பும் வராது என சுமதி முழுமையாக நம்பியுள்ளார். இதனால், அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆன்டி-ரேபிஸ் (Anti-Rabies Vaccine) தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டார். காயம் சிறிய அளவில் இருந்ததாலும், வலி பெரிதாக இல்லாததாலும் அந்த சம்பவத்தையே சுமதி முழுமையாக மறந்தும் விட்டார்.
ரேபிஸ் நோயின் தீவிர அறிகுறி
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு சுமதிக்குத் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு தண்ணீர் குடிக்க முயன்றாலோ அல்லது உணவைப் பார்த்தாலோ ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது ரேபிஸ் நோயின் தீவிர அறிகுறி என்பதை உணராத குடும்பத்தினர், அவரது நிலைமை மோசமடைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு சுமதியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதை உறுதி செய்தனர். உடலில் நரம்பு மண்டலம் வரை பாதிப்பு சென்றதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி கடந்த திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். ஆசையாக வளர்த்த நாய் குட்டியின் ஒரு சிறு நகக் கீறல், ஒரு குடும்பத்தின் அச்சாணியாக விளங்கிய தாயின் உயிரைப் பறித்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாக்டர்கள் வார்னிங்
இந்தச் சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை மிகவும் முக்கியமானது. "நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் வரும் என்பது மிகப் பெரிய அறியாமை. நாயின் உமிழ்நீர் படிந்த நகங்கள் நமது தோலில் கீறலை ஏற்படுத்தி, அதன் மூலம் வைரஸ் ரத்தத்தில் கலக்க வாய்ப்பு அதிகம். நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ அல்லது கீறினாலோ, உடனடியாக அந்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு குறைந்தது 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். அதன்பின் 24 மணி நேரத்திற்குள் உரியத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது மட்டுமே உயிரைக் காக்க உதவும்" என்று அட்வைஸ் செய்துள்ளனர்.
சுமதியின் உயிரிழப்பு, செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிறு காயமாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது எவ்வளவு அவசியம் என்பதுதான் இந்த சம்பவம் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது......!!!












Click it and Unblock the Notifications