ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை அமெரிக்க நபர் சந்தித்த சம்பவம்…விசாரணை தீவிரம் என ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுடன் சந்தித்து பேசிய அமெரிக்க இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
2018ம் ஆண்டின் மிகப்பெரிய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க மற்றும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத சம்பவம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடும். 13 பேரை பலி கொண்ட அந்த சம்பவத்தை கண்டித்து தமிழக மக்களும், எதிர்க்கட்சிகள் பொங்கின. சொந்த நாட்டு மக்களை கொன்றது அரச பயங்கரவாதம் என்று அவை முழங்கின.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தன. தொடர்ந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை தரப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது.

தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்கநபர்
இந் நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 35 வயதுடைய மார்க் சியல்லா என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடி வந்தார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சென்று சந்தித்தார்.

மக்களுடன் சந்திப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கும் மார்க் சியல்லா சென்று மக்களை சந்தித்து பேசினார். அவரை தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் அழைத்து சென்று வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தூத்துக்குடியில் மார்க் சியல்லா தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதேபோன்று பிரின்சையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணை நடத்திய போலீசார்
அதன்பின்னர் அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா விசாரணைக்காக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப் பட்டார். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் மார்க் சியல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

செய்தி சேகரிக்கும் பணி
விசாரணையின் போது, மார்க் சியல்லா, அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்றில் செய்தியாளராக இருப்பதாகவும், ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார், அவருடைய மடிக்கணினி, கேமரா உள்ளிட்டவற்றையும் சோதனை செய்தனர். வருகின்றனர்.

சந்தீப் நந்தூரி பேட்டி
இந் நிலையில் தூத்துக்குடியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக கடந்த 28ம் தேதி அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று வந்ததாக அவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் யாருடைய அழைப்பின் பேரில் வந்தார் அவர் எந்தெந்த இடங்களுக்கு சென்றார் அவர் எடுத்த வீடியோ போட்டோ என்ன எடுத்தார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications