தெருவுக்கு 10 டாஸ்மாக்! திமுக அரசு மீது பிரேமலதா விஜயகாந்த் சாடல்! 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி?
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பேயில்லை என்பதை போல் திமுக அரசை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளுத்து வாங்கி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும், கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்துவதை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆலங்குளத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கனிமவளக் கொள்ளையை தட்டிக்கேட்ட நேர்மையான அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம் என்றும் இதன் மூலம் உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கு இடமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் கூறினார்.
தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்திருப்பது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என பிரேமலதா விஜயகாந்த் சாடினார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறிய பிரேமலதா, இன்றைய நாள் வரலாற்றின் முக்கியமான நாள் எனக் கூறினார்.
தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications