நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால்.. எதிர்க்கட்சிகளை சாடுவதே பிரதமரின் பதில்..கனிமொழி குற்றச்சாட்டு
தூத்துக்குடி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை சாடுவதையே பதிலாக வைத்திருப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். அதேபோல், நாடாளுமன்றம் பாராட்டு பத்திரங்களை மட்டுமே வாசிக்கும் இடமாக மாறி வருவதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இயக்கிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, மதுரை எம்பி சு.வெங்கடேசன், தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கனிமொழி பேச்சு
இந்த விருது விழாவில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், நாங்கள் நேற்று தான் நாடாளுமன்றத்தில் இருந்து தமிழ்நாடு வந்திருக்கிறோம். நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான கேள்விகளையும், பிரச்சினைகளையும் எழுப்பும் இடமாக இல்லாமல், வெறும் பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக் கூடிய இடமாக மாறி இருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை, மக்களுக்கு உருக்கக் கூடிய அச்சங்களை, அவர்கள் முன்வைக்கக் கூடிய கேள்விகளை கேட்கக் கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால் கேள்வி நேரங்களில் கூட அப்படிப்பட்ட சூழலை உருவாக்க முடியாத நிலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சிகள் மீது சாடல்
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒவ்வொரு அரசியல் இயக்கமும், கட்சியும், அங்கே இருக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளும் கேள்விகளை முன் வைக்கும் போது, அவர்கள் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது மட்டும்தான். எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வதே இல்லை. கேள்வி கேட்டதே தவறு என்று கேள்வி கேட்டவர்களை எல்லாம் குறைத்து பேசுவது, நையாண்டி செய்வது, மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற சூழலை தான் நாம் நாடாளுமன்றத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மதுரை எய்ம்ஸ்
ஒரு மத்திய அமைச்சரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்னவென்று கேள்வி எழுப்பினால், அவர் பதில் அளிக்காமல் அச்சுறுத்துகிறார். சுருக்கு கயிறு உங்கள் கழுத்தை நெறிக்கும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் பதில் கூறுகிறார் என்றால், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications