சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. 4 சடலங்கள் மீட்பு.. குழந்தையை தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் மீட்கப்பட்டுள்ளது. 4 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கிய நிலையில், 4 மணி நேரத்தைக் கடந்தும் அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்.

சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. உடனே சுதாரித்த காரில் இருந்த சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து காயமின்றி தப்பினர்.
மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர்.
கார் கிணற்றுக்குள் பாய்ந்ததும், தப்பியவர்கள் அப்பகுதி மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். கிராம மக்கள் உடனடியாக சாத்தான்குளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கிணற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹெர்சோம் என்பவரை கிராம மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜேசிபி, கிரேன் இயந்திரங்கள் வரவழைத்து தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதனாலும் முடியாததால், தூத்துக்குடி முத்துக்குளி வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் மீட்கப்பட்டுள்ளது. 4 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வருகின்றனர். வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications