வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு ரூ.100 தரிசனம் இல்லை
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் மே 31 வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று முருகனை வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30-க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்தப்படும். காலை 10 மணிக்கு மூலவர் மற்றும் சண்முகர் இருவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிப்பார். இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறும். இத்திருவிழாவிற்காக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தருவர்.
பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பக்தர்களின் வசதிக்கு அரசுப் பேருந்துகளும், தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்கள் நலன் கருதி ₹100 கட்டணத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை 4 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம் அமலில் இருக்கும். இதன் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மே 28 முதல் மே 31 வரை, கட்டணமில்லா பொது தரிசன முறையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications