தூத்துக்குடி வெள்ளம்.. களத்தில் இறங்கிய சசிகலா புஷ்பா.. ரூ.1000 கோடி என்ன ஆச்சு.. கடும் விளாசல்
தூத்துக்குடி: ஒரு நாள் மழையை சமாளிக்க முடியாத திறனற்ற ஆட்சி தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறுவதாக பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் என்ன ஆனது என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மழை: தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

தேங்கிய வெள்ளநீர்: தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, வஉசி சாலை லூர்தம்மாள்புரம் ஆரோக்கியபுரம், மேட்டுப்பட்டி, முருகன் தியேட்டர், கலைஞர் நகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலையின் ஓரங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர்: தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையா நகர் மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர், லூர்தம்மாள் புரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் குளம் போல தேங்கியது. தெருக்களில் ஆறுகள் போல மழை நீர் ஓடியது. வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.
மக்கள் சிரமம்: வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் மேயரும் ராஜ்யசபா எம்.பியும் தற்போதைய பாஜக துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா ஆளும் திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
சசிகலா புஷ்பா: ஊழல் அரசுதான் மழை வெள்ளம் தேங்குவதற்குக் காரணம் என்று சசிகலா புஷ்பா குற்றம் சாட்டினார். ஒரு மழையை கூட தூத்துக்குடி நகரம் தாங்க முடியவில்லை. மக்கள் படும் சிரமத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. மோட்டர் கூட ரிப்பேர் ஆகிவிட்டதாக மாநகராட்சியில் கூறுகின்றனர்.
ரூ.1000 கோடி எங்கே: இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி ஜி ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்திருக்கிறார். அந்த ஆயிரம் கோடி ரூபாயை இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளர்.
நானும் மேயர்தான்: மழை நீர் கால்வாய்கள் முன்னாடியே அமைக்கத் தெரியாதா? மழை நீர் வடிகால் பணிகளை முன்பே தொடங்கி மழை காலத்திற்கு முன்பே முடித்திருந்தால் வெள்ள நீர் தேங்கியிருக்காது. நானும் இதே மாநகராட்சியில்தான் மேயராக இருந்திருக்கிறேன். தண்ணீர் தேங்கியதில்லை. நாங்கள் யாரையும் கஷ்டப்படுத்தியதில்லை. தெரு தெருவாக இறங்கி வேலை பார்த்தோம். அப்போது பட்ஜெட் வெறும் 10 லட்சம்தான் என்றும் கூறினார் சசிகலா புஷ்பா.
ஊழல் அரசு: நிர்வாக திறனற்ற ஊழல் அரசுதான் திமுக அரசு. மழை வெள்ள காலத்தில் மக்களை தத்தளிக்க விடுகின்றனர். வீட்டிற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. சமையல் அறை வரைக்கும் தண்ணீர் உள்ளது. குழந்தைகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு உள்ளிட்ட சுகாதார கேடுகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியும் திமுக அரசும் செயல் இழந்து விட்டது என்றும் சசிகலா சராமரியாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications