சொன்னது 525 வாக்குறுதிகள்.. 10% கூட நிறைவேற்றாத ஸ்டாலின்! தூத்துக்குடியில் கொதித்து பேசிய எடப்பாடி
தூத்துக்குடி: ‛‛தமிழகத்தில் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி என எல்லா வரிகளையும் உயர்த்தி விட்டார்கள். மின்கட்டணம் 67% உயர்த்திவிட்டனர். சொன்னது ஒன்று, செய்வது ஒன்று. கட்டுமானப் பொருட்கள் விலையும் 100% ஏறிவிட்டது. பிளான் அப்ரூவல் 40 ஆயிரம் ரூபாய் என்றால் இந்த ஆட்சியில் 80 ஆயிரம் ரூபாய் 100% உயர்த்திட்டாங்க'' என்று முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடியில் விமர்சனம் செய்தார். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டு, அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டபிடாரம் தொகுதிகளில் மக்களை சந்தித்துவிட்டு, இறுதியாக தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி, விவிடி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஸ்டாலின் பகல் கனவு
"தூத்துக்குடி நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கிறது. கடல்போல் எல்லையில்லா தூரம் மக்கள் கூட்டம். இந்த மக்கள் எழுச்சி ஆரவாரமே தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டதைச் சொல்கிறது. திமுக கூட்டணி வலிமையானது. 200 இடங்களில் வெல்லும் என்கிறார் ஸ்டாலின். அது பகல் கனவு.ஸ்டாலின் அவர்களே நேரலையில் தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியைப் பாருங்கள்.
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதே தூத்துக்குடியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு கடும் மழை வெள்ளம், ஓடோடி வந்து பார்த்தோம். முதல்வர் உங்களை வந்து பாக்கவில்லை. டெல்லிக்குப் போய் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களை பார்க்காத முதல்வர் தேவையா? உணவு நீர் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்ததும் நான் அடுத்த நாளே வந்தேன்.
நிறைய திட்டங்கள்
பகில் ஓடையில் அதிமுக ஆட்சியின்போது நிதி ஒதுக்கி தூர் வார நடவடிக்கை எடுத்தோம். திமுக ஆட்சியில் கமிஷன் படியாததால் கைவிட்டனர். அதனால் வெள்ள நீர் வடியாமல் வீடுகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியது, கார், பைக் எல்லாம் மூழ்கியது. எங்களால் ஆன உதவிகளை நாங்கள் செய்தோம். இங்குள்ள அமைச்சர் வரவில்லை. முதல்வர் வரவில்லை, மக்கள் பாதிக்கப்படும்போது குறை கேட்பவர்தான் உண்மையான முதல்வர். அப்படிப்பட்ட முதல்வர் இங்கு இருக்கிறாரா..? அவர் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்.
அவர் குடும்பத்தில் இப்படி நடந்தால் டெல்லிக்குப் போவாரா முதல்வர்? நாங்க பேசுவது உண்மை. மக்கள் பிரச்னைக்கு ஓடோடி வருவது அதிமுக மட்டுமே. அதிமுக ஆட்சியில்தான் 1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவந்தோம். சிறப்பாக வேலை நடந்தது. ஆட்சி மாறியதும் அவர் ரிப்பன் வெட்டி திறந்தார். தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர் நான்காவது பைப் லைன் 283 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். அதற்கு முன்பு அம்மா, எம்ஜிஆர் இருந்தபோதும் குடிநீர் வழங்கினோம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேன்சருக்கு நவீன கருவி அமைத்துக்கொடுத்தோம். இப்படி நிறைய திட்டம் நிறைவேற்றினோம்.
10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை
திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டு, அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை. எப்போது கேட்டாலும் 1000 ரூபாய் உரிமை தொகை கொடுத்தோம் என்கிறார். எப்போது கொடுத்தார்கள்..? 28 மாதம் கழித்து, அதுவும் அதிமுக தான் போராடி வாங்கிக்கொடுத்தது. இப்போது மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டதால் விதியை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறார். மக்கள் கஷ்டத்தை எண்ணிக் கொடுக்கவில்லை அடுத்தாண்டு தேர்தல் வருது, ஓட்டுப் போடுவாங்க என்றுதான் கொடுக்கிறார். உஷாரா இருங்க.
அதிமுக 1500 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னோம். ஆனால் திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள். இப்போது 30 லட்சம் பேருக்கு 52 மாதம் பட்டை நாமம் போட்டுவிட்டார். பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் கொடுத்தோம். நான் வரும்போது பெண்கள் ரேஷன் கடையில் மோசமான அரிசி கொடுப்பதாக புகார் கொடுத்தனர். 7 லட்சம் பேருக்கு தினமும் உணவு கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுத்தோம். புயல் வெள்ளம் கொரோனா எல்லாம் சந்தித்தோம். உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
உதயநிதி மீது அட்டாக்
வாக்கிங் போறார், பளு தூக்குறார், சைக்கிள் ஓட்டுகிறார், இதுக்காகவா முதல்வர் ஆக்கினார்கள்?
மிச்சமிருக்கும் காலத்திலாவது நாட்டு மக்களைப் பாருங்க முதல்வர் அவர்களே. இந்தியாவிலேயே பல முதல்வர்கள் வெளிநாடு போய் தொழில் ஒப்பந்தம் போடுவார்கள். நம்ம முதல்வர் தமிழ்நாட்டு தொழில் அதிபரை அங்கு அழைத்துச்சென்று ஒப்பந்தம் போட்டார். அங்கு யாரும் முன்வரவில்லை. அதனால்தான் இங்குள்ளவரை வைத்து ஒப்பந்தம் போட்டது மாதிரி நடித்தார். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள் செய்யவில்லை. உதயநிதி ரகசியம் இருக்கிறது என்றார், அதை சொல்லவில்லை.
உங்க அப்பா தூத்துக்குடி வருகிறாராம் அவரிடமாவது சொல்லி அனுப்புங்கள்.. எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். எங்களால் நீட் தேர்வை நிறுத்த முடியாது என்று சட்டமன்றத்திலேயே சொல்லிவிட்டார். கியாஸ் மானியம் கொடுக்கலை, சர்க்கரை 2 கிலோ கொடுக்கவில்லை, மாணவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யவில்லை. கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் காக்க ஆல் பாஸ் போட்டோம். ஆன்லைனில் எக்ஸாம் நடத்தினோம் அரியர் வைத்தவர்கள் எல்லாம் பாஸ் பண்ணிட்டாங்க.
விலைவாசி உயர்வு
அதிமுகவைப் பொறுத்தவரை மாணவர்கள், தொழிலாளர், மகளிர் பிரச்னையை ஆய்வுசெய்து தீர்க்கும் அரசு அதிமுக அரசு. இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி என எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டார்கள். மின்கட்டணம் 67% உயர்த்திவிட்டனர். சொன்னது ஒன்று, செய்வது ஒன்று. கட்டுமானப் பொருட்கள் விலையும் 100% ஏறிவிட்டது. இதை கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள்..? கட்டுமானப் பொருள் விலையேறும்போது அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்து விலை குறைக்கப்படும் என்றனர். பிளான் அப்ரூவல் 40 ஆயிரம் ரூபாய் என்றால் இந்த ஆட்சியில் 80 ஆயிரம் ரூபாய் 100% உயர்த்திட்டாங்க.
பத்திரப்பதிவில் பணம் வெட்டினால் தான், பதிய முடியும். இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தங்கம் விலை நிலவரம் போல கொலை நிலவரம் தான் வருகிறது. போதைக்கு இளைஞர்கள் அடிமையாகிவிட்டனர். நேற்று புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு கைதிகளை அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது கைதிகள் போலீஸை மிரட்டுறான். முகத்தில் குத்துறான். போலீஸுக்கே பாதுகாப்பில்லை, நம்மை யார் பாதுகாப்பது? கைதிகள் காவல்துறையை மிரட்டுகின்ற காட்சியை திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும்.
இந்த ஆட்சி தேவையா?
அரியலூர் அருகே ஒருவர் பைக்கில் போகிறார், மரத்தின் ஓரம் நிறுத்துகிறார். அங்கு மது அருந்திக்கொண்டு இருக்கும் சிலர் தகராறு செய்கிறார்கள், அவரை அடிக்கிறார்கள். அவர் பயந்து ஓடும் பஸ்ஸில் ஏறுகிறார், விடாமல் பஸ்ஸிலும் ஏறி வெட்டுகிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை.
எங்க ஏரியா கொங்கு மண்டலத்தில் முதியோர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து, வெட்டி சாய்ச்சிட்டு போகிறார்கள். இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? திருவள்ளூர் மாவட்டத்துல சிறுமியை ஒருவன் தூக்கிட்டு போனான், அடுத்த ஒரு வாரம் கழித்து அதே திருவள்ளூரில் இன்னொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. கடந்த 20 நாளில் திருவள்ளூரில் மட்டும் 11 பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதைப்பற்றி கவலைப்படாதவர்தான் முதல்வர்.
குற்ற நாடாக மாறும் தமிழ்நாடு என்று பத்திரிகையில் தலைப்புச்செய்தி வருகிறது. இதை நாம் சொன்னால் கேட்பதில்லை.
கிறிஸ்தவர்களுக்கு கடனுதவி
இது மீனவர் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் தான் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி உயர்த்தி வழங்கினோம். டீசல் மானியம் கொடுத்தோம், கிறிஸ்தவ மக்களுக்கும் நிறைய செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே முதல்முறையாக கிறிஸ்தவப் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது. தேவாலயப் புனரமைப்பு நிதி, ஜெருசலேம் புனித பயண நிதி 38 ஆயிரமாக உயர்த்தி வழங்கினேன். அருட்சகோதரிகளுக்கு தனி இடஒதுக்கீடு.
10 ஆண்டு கால ஆட்சியில் 37 லட்சத்து 16 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு 884 கோடி ரூபாய் கல்வித் தொகை வழங்கப்பட்டது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் முதன்முதலில் குடிநீர் பெற்றுக்கொடுத்த க்ரூஸ் ஃபெனாண்டோ அவர்களுக்கு அரசு விழா எடுக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதும் அதிமுகதான்.
8 மாதத்தில் தீர்க்க முடியுமா?
உங்களுடன் ஸ்டாலின் இப்போது புதிதாக 46 பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லியிருக்ககிறார். இப்போதுதான் மக்கள் பிரச்னை தெரிகிறது. 45 நாளில் சரி செய்வாராம். இத்தனை நாள் என்ன செய்தீர்கள்? 50 மாத காலத்தில் தீர்க்க முடியாத பிரச்னையை இன்னும் 8 மாதத்தில் தீர்க்க முடியுமா? இது ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் நாடகம்.
இதே மாதிரிதான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது புகார் பெட்டின்னு ஒரு திட்டம் கொண்டுவந்து மனுக்களை வாங்கினார்.ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என்றார், ஏற்கனவே மனு கொடுத்துவிட்டார்களே, இப்போது மீண்டும் எதற்கு..? எப்படியெலாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்து, வருகின்ற தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின்" என்றார்.












Click it and Unblock the Notifications