"வாழ்க்கையே போச்சு.. எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும்!" கலெக்டர் ஆபீசில் திரண்ட ஆதரவாளர்கள்! பரபரப்பு
தூத்துக்குடி: பெரும் போராட்டத்திற்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018இல் மூடப்பட்ட நிலையில், சிலர் ஆலையை திடீரென முற்றுகையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கி வந்தது. இருப்பினும், அந்த ஆலையால் ஏற்படும் காற்று மாசு காரணமாக அங்குள்ள மக்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கடந்த 2018இல் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை
கடந்த 2018, மே 22இல் போராட்டகாரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு போலீசார் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது நடத்தப்பட்ட தடியடியில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

திரண்ட மக்கள்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இடையில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில் மட்டும், ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆலை திறக்கப்பட்டது. அதைத் தாண்டி கடந்த நான்கு ஆண்டுகளாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி கலெக்டர் ஆபீசுக்கு பொதுமக்கள் திரண்டனர்.

12 கிராமத்தினர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சுற்றியுள்ள கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள மீளவிட்டான், மடத்துர், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர் புரம், சங்கரபேரி, அய்யனடைப்பு, சில்லாநத்தம், நயினார்புரம், உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொய்யான புகார்
அப்போது மனு அளிக்கவந்த சாமி நத்தம் பகுதியைச் சேர்ந்த ஆலையில் வேலை பார்த்த ஆனந்த குருநாதன், செய்தியாளர்களிடம் கூறுகையில், பொய்யான தகவலைக் கூறி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 18 வருடமாக அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து உள்ளேன் எந்த நோயும் ஏற்படவில்லை. ஆகவே ஆலையைத் திறக்க வேண்டும் என மனு அளித்தனர்.

சம்பந்தம் இல்லை
இது தொடர்பாக சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மாரி கூறுகையில், "பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர். காற்று மாசு என்பது பொய்யான குற்றச்சாட்டு.. மாசுக் கட்டுப்பாடு வாரியம் காற்று மாசு எதுவும் ஏற்படவில்லை என்றே கூறுகிறது. அதேபோல துப்பாக்கிச் சூட்டிற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்" என்றார்.

எதிர் தரப்பினர்
அதேநேரம் மற்றொரு புறம் ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து அகற்றக்கோரி சர்வதேச உரிமைகள் கழகத்தினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிலரை மூளைச் சலவை செய்து, விலைக்கு வாங்கி ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்களாக நிர்வாகம் மாற்றியுள்ளதாகவும் இது தூத்துக்குடி மக்களிடையே ஆலையைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என்பது போன்ற கருத்தை ஏற்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.












Click it and Unblock the Notifications