ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு.. செலவுகளை நிர்வாகம் ஏற்க உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும் ஜிப்சம் உள்ளிட்டப் பொருள்களை எடுக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
கழிவுகள் அகற்றப்படாவிட்டால் உபகரணங்கள் பாதிக்கப்படும் என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. எனினும், இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தது. இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு அகற்றினாலும் அதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆலையில் உள்ள இயந்திரங்களை அகற்றுவது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட இந்த குழுவில் துணை காவல் கண்காணிப்பாளர், தொழில் மாசு கட்டுப்பாடு, தீ அணைப்பு, மாநகராட்சி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும். கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் உள்ள தொழிலாளர்கள் செல்லும் கதவு மட்டும் திறக்கப்படும்.

கேட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் . சார் ஆட்சியர் தலைமையில் டி.எஸ்.பி, மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். வாரம் ஒருமுறை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகள் அகற்றப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications