செம கோபத்தில் அரசு ஊழியர்கள்.. பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? வராதா? வார்னிங் கொடுத்த ஆசிரியர் சங்கம்!
தூத்துக்குடி: திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் எனவும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த குழு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர் சங்கங்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம்
இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும், வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் மயில் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்ட எந்தத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோட்டை முற்றுகை
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. கடந்த 18-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ககன்திப் சிங் பேடி குழு
ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை என்பதால் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, உடனடியாக எங்களது கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். அவர்கள் எங்கள் சங்கங்களை அழைத்து கருத்துக்களை கேட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் கோபம்
அந்தக் குழுவின் அறிக்கை பெற்று, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்தத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக்கல்வித்துறையில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட நியமிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2430 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
காலிப்பணியிடங்கள்
ஆனால், அரசின் புள்ளிவிவரப்படி 5500 காலிப்பணியிடங்கள் மாவட்டம் வாரியாக உள்ளன. அதில் 2430 மட்டும்தான் நிரப்பப்பட்டுள்ளன. அதனால் மீதமுள்ள 3000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயரும். திமுக அரசு அளித்த முக்கியமான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடுகளைக் களைவோம் என்றனர். அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. இன்னும் உள்ள 5 மாதங்களில் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications