ஜெயலலிதா பரிசளித்த கார்..! பத்திரமாகப் பாதுகாக்கும் தொண்டர்..! இவர் யார் தெரியுமா?
தூத்துக்குடி: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஜெயலலிதா பரிசாக வாங்கிக் கொடுத்த காரை இப்போது அவரது நினைவாகப் பத்திரமாக வைத்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம். அப்போது சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. நாடு சுதந்தரம் பெற்றதிலிருந்தே இந்தத் தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. அதன்பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ்தான் இங்கே வெற்றி பெற்றது. அதை உடைத்து முதன் முறையாக அதிமுக வேட்பாளர் ஒருவரைப் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. ஒரு சாதாரண விவசாயியாக இருந்த நீலமேக வர்ணம் என்பவரை தேர்வு செய்து அறிவித்தார் ஜெயலலிதா. இவரும் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவச் செய்தார்.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவிலிருந்த காலம். அவரது செல்வாக்கை மீறி ஒரு பனைமர தொழிலாளியான நீலமேக வர்ணம் என்பவரை நேரடியாக ஜெயலலிதாவே தேர்வு செய்து அறிவித்தார். கட்சியில் ஒன்றிய செயலாளராக இருந்த இந்த அடிமட்ட தொண்டர் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தார். அது பலரையும் அன்றைக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த பிளாஷ் பேக் எல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? இந்த நீலமேக வர்ணம் இப்போதும் தன் வீட்டில் ஜெயலலிதா கொடுத்த காரை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். அதைப் பற்றி அவர் பேசும் போது, "நான் ஒரு சாதாரண விவசாயி. 2003இல் அதிமுக சார்பாக சீட்டுக் கேட்டுப் பார்ப்போம் என்று 10 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினேன். என் மகனுக்கும் சேர்த்துத்தான் கட்டினேன். பலரும் சீட்டுக் கிடைக்காது. பணத்தை வீணாக்க வேண்டாம் என்றார்கள். நான் இதை ஒரு வாய்ப்பாக வைத்து ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியுமே என்ற ஆசையில் பணம் கட்டிவிட்டு வந்துவிட்டேன்.
நான் எனக்குச் சீட்டு தருவார் என நினைக்கவே இல்லை. இது காங்கிரஸ் தொகுதி. ஆகவே அதிமுக கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கும் என்றே நம்பி, ஊர் திரும்பிய நான் சுவர் விளம்பரத்திற்கு இடம் பிடித்துக் கொண்டிருந்தேன். திடீர் என்று கலெக்டர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. முதல்வர் ஜெயலலிதா உங்களைச் சந்திக்க அழைக்கிறார். நாளை வாருங்கள் என்றார்கள். எனக்காக அனிதா ராதாகிருஷ்ணன் கார் அனுப்பி இருந்தார். நான் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு பேருந்தில் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தேன்.
அவர் என்னை போயஸ் கார்டனில் சந்தித்தார். வேறு யாருமே இல்லை. அறையில் அவர் மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததும் 'உங்களுக்குக் கண் பார்வை சரியாக தெரியுமா?' என்றார். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். தினம் 2கிமீட்டர் நடக்கிறேன். சுகர் கூட இல்லை என்றேன். உடனே அதைக் கேட்டு, 'சுகர் ஒரு பிரச்சினையா?' என்று சிரித்தார். மருத்துவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்றேன். கட்சியில் எப்போது இருந்து இருக்கிறீர்கள்? என்றார்.

அதிமுக இரண்டாக உடைந்தபோது உங்கள் அணியில்தான் நான் இருந்தேன் என்றேன். அதன் பின் உங்களுக்குத் தான் சீட்டு தரப் போகிறேன். அறிவிக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். அதே போல் எனக்குச் சீட்டுக் கொடுத்தார்" எனப் பழைய நினைவுகளை அசைபோட்டுள்ளார் நீலமேக வர்ணம்.
தொடர்ந்து பேசி அவர் ஜெயலலிதா கார் கொடுத்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், "நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது பைக்கில் சட்டசபை கூட்டத்திற்குப் போனேன். காவல்துறை அதிகாரிகள் மறித்து விசாரித்தனர். நான் சட்டமன்ற உறுப்பினர் அட்டையைக் காட்டிய பிறகு, 'நீங்க ஏன் பைக்கில் வருகிறீர்கள்? காரில் வரவேண்டியதுதானே?' என்றார்கள். என்னிடம் கார் இல்லை.
மறுநாள் ஜெயலலிதா என்னை காளிமுத்து மூலம் சந்திக்க அழைத்தார். போனேன். 'ஏன் பைக்கில் வந்தீர்கள்?' என்றார். அதன் அவரே 'ஆமாம் உங்களிடம் கார் இல்லை என முன்பே சொன்னீர்கள்?' என்று சொன்னார். மதியம் வாக்கில் செம்மலை வந்தார். 'அம்மா உங்களுக்கு கார் வாங்கி கொடுக்கச் சொன்னார். என்ன வண்டி வேண்டும்?' என்றார். அவரிடம் நீங்களே ஒரு வண்டியை தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். அவர் டொயோட்டா குவாலிஸ் வாங்கி கொடுத்தார்.
கார் வாங்க வேண்டி முழு பணத்தையும் அம்மாவே கொடுத்தார். காரை வாங்கிய பணம் போக மீதி பணத்தை ஒரு கவரில் வைத்து அம்மாவுக்குக் கடிதம் கொடுத்தேன். அவர் முழு தொகையும் உங்களுக்குத்தான் வைத்துக் கொள்ளுங்கள்' எனச் சொல்லிவிட்டார். அப்படி வாங்கியதுதான் இந்த வண்டி. இப்போது நல்ல நிலையில் உள்ளது.
மருத்துவமனைக்குச் செல்வது, வெளியூர் செல்வதாக இருந்தால் இதில்தான் போவேன். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. என் மகன் தான் ஓட்டுவார். அம்மாவின் நினைவாக இந்த வண்டி இன்னும் உள்ளது. நான் இருக்கும் வரை இந்த வண்டியும் பத்திரமாக இருக்கும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications