இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்! குலசையில் கோலாகலமாக தொடங்கிய தசரா திருவிழா! குவிந்த பக்தர்கள்..!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலமாக வந்தது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து வெளி மாநிலங்களான மும்பை, வெளி மாவட்டங்களான சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் கடற்கரையில் நீராடி கோவிலில் மாலை அணிவித்து காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருக்கும் தசரா குழுவினருக்கும் மொத்தமாக காப்புகள் வழங்கப்படும். விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான 12-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் நள்ளிரவு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹாரத்தில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
