பட்.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. தூத்துக்குடியில் மாடுகளை திருடியவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிய திருடன், அந்த மாடுகள் எங்கு கட்டி வைக்கப்பட்டுள்ளது என்று உரிமையாளரின் தோட்டத்தின் முன் எழுதி வைத்துள்ளார். திருடினாலும் உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்பது போல் உற்சாகமான மாட்டின் உரிமையாளர் மாடுகளை அவிழ்த்து தோட்டத்திற்கு கொண்டுவந்தார்.
திருடர்களில் பலர் வித்தியாசமான முறையை கையாள்கிறார்கள். சிலர் திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு உறங்குவது, சிலர் திருடிய வீட்டில் பொருட்களை மனசு கேட்காமல் திரும்ப ஒப்படைப்பது, சிலர் திருடியதற்காக உரிமையாளருக்கு மன்னிப்பு கடிதம் எழுதுவது என வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள்.. எல்லா திருடர்களும் இப்படி செய்வது இல்லை..

மிக அபூர்வமாக சில திருடர்களே திரும்பிய பொருட்களை திரும்ப ஒப்படைக்கிறார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாட்டின் உரிமையாளர் தோட்டத்தின் முன் திருடிய மாடுகள் இருக்கும் இடத்தை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான் திருடன்.
தூத்துக்குடி மாவட்டம் ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ் என்பவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 2 மாடுகளை கடந்த ஏப்ரல் 26-ந்தேதி மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பல இடங்களில் மாடுகளை தேடிய அவர், மாடுகள் எங்கும் கிடைக்காத நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மாட்டின் உரிமையாளரான பட்டுராஜின் தோட்டத்து வேலியில் நேற்று ஒரு அட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த அட்டையில் 'உங்களது மாடு சங்கரன்குடியிருப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. இட்டமொழி கிழக்கு' என்று எழுதப்பட்டிருந்தது.
உடனே பட்டுராஜ் அதில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவருடைய இரண்டு மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டார் . அதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பட்டுராஜ், மாடுகளை அவிழ்த்து தனது தோட்டத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் மற்றும் பட்டுராஜ் மாடுகளை தீவிரமாக தேடி வருவதை அறிந்த திருடன் அட்டையில் மாடு இருக்கும் இடத்தின் விவரத்தை எழுதி வைத்து விட்டு மாடுகளை விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. எனினும் மாடுகளை திருடியது யார்? என்பது குறித்து சாத்தான்குளம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications