போக்குவரத்து விதிமீறல்.. வாகனங்களுக்கான அபராதம்.. அரசு எடுத்த அதிரடி முடிவு குறித்து கலெக்டர் தகவல்
தூத்துக்குடி: மத்திய அரசு அறிவிக்கையின்படி போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளால், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் கூறியுள்ளார்.
இன்றைக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிக்னலை மதிக்காமல் சென்றாலோ, ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றாலோ அபராதம் விதிக்கப்படுகிறது. காப்பீடு இல்லாமல் சென்றாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை பொறுத்தவரை மது அருந்திவிட்டு ஓட்டினால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். அதேபோல் காப்பீடு இல்லாமல் ஓட்டிச்சென்று சிக்கினால் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் வாகன சோதனை நடத்தி அதிகாரிகள் அபராதங்களை விதித்து வருகிறார்கள். பல்வேறு வகையான விதிமீறல்களுக்கு அபராதங்கள் தினமும் விதிக்கப்பட்டு வருகிறது.சில பகுதிகளில் ஆன்லைனிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதங்கள் ஆன்லைனில் கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கினால் மட்டும் அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்படுகிறது. மற்ற அபராதங்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால் பலர் வாகனங்களின் மீதான அபராதத்தை கட்டுவது இல்லை. வண்டியை விற்கும் போது தான் அபராதம் கட்டுகிறார்கள்.. இல்லாவிட்டால் வண்டி நல்ல நிலையில் இருக்கும் வரையில் அபராதம் கட்டுவதே கிடையாது..
இப்படி ஏமாற்றுபவர்களை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய அரசு அறிவிக்கையின்படி போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளால், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனம் தொடர்பான எவ்வித பணிகளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செய்ய இயலாது.
மேலும், பரிவாகன் இணையதளத்தில் நாளது தேதி வரையில் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண்ணை உடனடியாக பரிவாகன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதபட்சத்தில், வாகன உரிமையாளர் செல்போன் எண்ணுக்கான உரிய அத்தாட்சியுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications