சென்னை போன தூத்துக்குடி போலீஸ் அதிகாரி.. கவனித்து ஆனந்தமாக வீடு புகுந்த திருடன்.. இறுதியில் ட்விஸ்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்த முனிராஜ் என்பவர் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர். கடந்த மாதம் முனிராஜ் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மகனை பார்க்க சென்றார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சென்னை சென்றதை நோட்டமிட்டு, வீட்டில் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் விட்டு திருடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரித்து போலீசார் கைது செய்கிறார்கள். அதேநேரம் போலீசாரிடம் ஊருக்கு செல்வது பற்றி கூறினால், ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்.

அதேபோல் தொழில்நுட்ப ரீதியாக திருடர்கள் வீடுகளுக்குள் நுழைவதை தடுக்க சென்சார், வீட்டிற்குள்ளேயே கேமரா, புதிய நபர்கள் வந்தால் அலாரம் அடிக்கும் வசதி போன்றவைகளை மொபைலிலேயே செய்ய முடியும். அதற்கும் வசதிகள் உள்ளது. வீட்டில் இருந்தபடியே திருடர்களை ஓடவிட முடியும். எனவே அதற்கான வசதிகளை இனி உருவாக்கினால் திருடர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்த 74 வயதாகும் முனிராஜ் என்பவர் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். முனிராஜ் மனைவியுடன் கோவில்பட்டி முத்துநகர் பல்லாக்கு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் முனிராஜ் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மகனை பார்க்க சென்றுள்ளார்..
அவர் வெளியூர் சென்றுவிட்டதை நோட்டமிட்டு அறிந்த மர்ம நபர் ஒருவர், வீட்டு கதவை உடைத்து மர்மநபர் உள்ளே புகுந்து ஒரு பவுன் எடையுள்ள 2ஜோடி தங்க கம்மல், ஒரு மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வந்தார்கள். மேலும், இத்திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துராஜாவை (32) நேற்று தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் கோவில்பட்டி பல்லாக்கு ரோட்டில் மடக்கி பிடித்தார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வரும் முத்துராஜா, கடந்த மாதம் கோவில்பட்டி ஜோதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது முனிராஜ் மனைவியுடன் சென்னை செல்வதை கவனித்துள்ளார். வெளியூர்சென்றவர்கள் வருவதற்கு நாளாககும் என்பதை உணர்ந்த முத்துராஜா, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications