தங்கத்து மேல அம்புட்டு ஆசை..வெறும் 9 பவுனுக்கு கொலை..வசமாய் சிக்கிய செல்வரதி! 16 வயசுலயே அப்படியாமே?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காவலரின் தாயார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 24 வயதான இளம் பெண்ணை போலீசார் கைது செய்திருக்கின்றனர். வெறும் 9 சவரன் தங்க நகைக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் 16 வயதிலேயே திருட்டுப் பழி சுமந்ததால் கொலை செய்தவர் தான் இந்த இளம் பெண் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது அந்த கொலை சம்பவம். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்தனர். காரணம் கொலை செய்யப்பட்டது ஒரு காவலரின் தாயார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விக்ராந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
தேரிப்பனையில் உள்ள பண்ணை வீட்டில் அவரது தாய் வசந்தா தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வசந்தா மர்மமான முறையில் உயிரிழந்து கிடர்ந்தார்.

திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டாரோ என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியும் இரண்டு சவரன் தங்க தோடுகளும் காணாமல் போயிருந்தது. இதனால் தங்க நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இதை அடுத்து மெஞ்ஞானபுரம் போலீசார் அப்பகுதியில் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வசந்தாவின் வீட்டிற்கு செல்வரதி என்ற பெண் வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து 24 வயதான அவரை பிடித்து விசாரித்த போது தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. செல்வரதி தனது கணவரின் ஊரான மீரான் குளத்தில் வசித்து வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் தனது சொந்த ஊரான தேரிப்பணைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது கழுத்தில் தங்க சங்கிலியுடன் நடந்து போன வசந்தாவை கண்டதும் தங்கத்தின் மீது ஆசை அதிகரித்திருக்கிறது.
தொடர்ந்து வசந்தவை கண்காணித்து வந்திருக்கிறார் செல்வரதி. மதியம் சாப்பிட்ட பிறகு கதவு ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டு வீட்டில் தூங்குவது வசந்தாவின் வழக்கமாம். இதனை மோப்பம் பிடித்த செல்வரதி திங்கட்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் சென்று இருக்கிறார். தொடர்ந்து ஜன்னல்கள், முன் பக்க கதவை உட்புறமாக தாழிட்டு விட்டு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தாவை அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்கிறார்.
தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியையும் இரண்டு தோடுகளையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார். தொடர்ந்து போலீசார் மீரான் குளத்துக்கு சென்று செல்வரதியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு பகீர் தகவல் வெளியானது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு சென்று பணத்தை திருடியுள்ளார். அதை எடுத்து ஊரில் எல்லோரின் வீட்டுக்கும் சென்ற அந்த மூதாட்டி செல்வரதி பணம் திருடியதை கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செல்வரதி ஒருவித மனநோயாளி போல மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூதாட்டியின் பேரனை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கடத்திச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வரதி மீது கொலை கொள்ளை வழக்கு மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் பல திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து செல்வதை பணம் திருடி வந்ததாக கூறுகின்றனர். வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகள் முடிந்தவரை நகைகள் அணிந்து கொண்டு வெளியே சுற்றுவதை குறைக்க வேண்டும் அல்லது நகைகளே இல்லாமல் இருப்பதும் நல்லது தான் என்கின்றனர் போலீசார். இல்லையே செல்வரதிகள் போல பலர் உங்களை நோட்டமிட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications