அதிசய காட்சி தூத்துக்குடியில்.. கீதா காபி கடையில் தோன்றிய கடமான்.. சாலையில் ஓடிய தருணம்.. பாருங்க
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்கு ஒன்று சாலையில் சுற்றி வருகிறது.. நேற்று கூட, இந்த அதிசய காட்சி அங்குள்ள மக்களை வியப்புக்குள்ளாக்கியது.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்படியென்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மெயின் பஜாரில், இரவு நேரங்களில் ஒரு அரியவகை வனவிலங்கு சுற்றி வந்துள்ளது.. ஆனால், பலருக்கும் அது என்ன வகையான விலங்கு என்று தெரியவில்லை..

பஸ் ஸ்டாண்ட் காபி கடை
நேற்றைய தினமும் ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கீதா காபி என்ற கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மீண்டும் அந்த காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசலுடன் சாலையில் செல்லும் மாடுகளுக்கு இடையே, அந்த விலங்கு நடமாடுவதை உற்று பார்த்தபோதுதான், அது மான் இனத்தைச் சேர்ந்த மிளா என்று தெரியவந்தது..
அதாவது கடமான் என்பார்கள்.. திடீரென ஒரு விலங்கு சாலையை கடந்து செல்வதை பார்த்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திகைத்து போய் அதை பார்ப்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது..
சிலர் அந்த வனவிலங்கை பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், அதை பிடிக்க முயன்றனர்.. ஆனால் அந்த மிளா, ஆத்தூர் யாதவர் தெரு வழியாக ஓடி, சேந்தபூமங்களம் காட்டுப் பகுதியில் பதுங்கிவிட்டதாம்..
ஆத்தூர் மிளா ஓடிய தருணம்
காட்டில் வாழும் வனவிலங்கு, மக்கள் நடமாட்டம் அதிகமான மெயின் பஜாரில் ஓடிய சம்பவம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இரவு நேரத்தில் சாலையில் ஓடிய மிளாவை பார்த்த மக்கள், செல்போன்களில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த அரிய வகை வனவிலங்கு "மிளா"வின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெரும்பாலும் சேலம் மாவட்டத்தில் கடமான் போன்ற பெரிய மான் இனங்கள் அதிகமாக இருக்கும்.. இதற்கு காரணம், சேலம் மாவட்டத்தில் அடர்ந்த காடுகளை விட, திறந்த நிலம், புதர்காடு, புல்வெளி போன்ற பகுதிகள் அதிகம் இருப்பதால், கடமான்களுக்கு ஏற்ற இயற்கை சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல ஏற்காடு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்ச்சியாக உள்ள வனப்பகுதிகள் கடமான்களின் இயற்கை வாழ்விடமாக உள்ளன.
கடமான்களின் வாழ்விடம்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் கடமான் நடமாடுவதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதியின் இயற்கை சூழலும் மனித செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கும் மாற்றங்கள்தான்... அதிலும் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் வல்லநாடு போன்ற வனப்பகுதிகள், புல்வெளிகள், குறைந்த அடர்த்தியுள்ள காடுகள் இருப்பதால், மான்களுக்கு பிடித்தமான சூழலை தந்துள்ளது..
ஆத்தூரில் கடமான் நடமாட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் சொல்லும்போது, "மான்கள் குடிநீர், புல் தேடி கிராமப்புறங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சிலசமயம் வந்துவிடுவதாக தெரிகிறது..
அபூர்வமான விஷயம்?
அதுமட்டுமல்ல, காலங்களில் குடியிருப்புகள், சாலைகள், விவசாய விரிவாக்கம் போன்ற காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி வருகின்றன.. இதனால் மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு, ஊருக்குள் வந்துவிடும் சூழலும் பெருகி வருகிறது.. எனவே ஆத்தூர் பகுதிகளில் கடமான் வருவது ஒன்றும் அபூர்வமான விஷயம் அல்ல..
ஆத்தூர் பகுதியில் பதுங்கியுள்ள மிளாவை வனத்துறையினர் உடனடியாக மீட்டு, பாதுகாப்பான வனப்பகுதியில் விட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications