தொகுதி மேம்பாட்டு நிதி வழங்காத மத்திய அரசு! எப்படி வளர்ச்சி பணி செய்வது? கனிமொழி எம்பி கேள்வி
தூத்துக்குடி: ‛‛மக்களவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு சரிவர வழங்குவது இல்லை'' என திமுகவின் கனிமொழி எம்பி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல இடங்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பல இடங்களில் மரம் நடும் விழாக்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரடிகுளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 30,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன்
இந்த விழாவில் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பி கனிமொழி, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பேசினர். கனிமொழி எம்பி பேசியதாவது:

இதுதான் கடமை
குழந்தைகளுக்கு நாம் பல பொருட்களை சேமித்து வழங்குகிறோம். உண்மையில் அவர்களின் எதிர்காலத்துக்கு பயனுள்ள பரிசு ஒன்று உண்டெனில் அது நாம் நடக்கூடிய மரங்கள் தான். நாம் நடும் ஒவ்வொரு மரங்களும் நம் எதிர்கால சந்ததியையும், இந்த மண்ணையும் பாதுகாக்கும் பெரிய அரணாக கேடயமாக இருக்கும். அடுத்த தலைமுறையினருக்கு பயனளிக்கும் வகையில் அவர்களுக்கு மழை கிடைக்க செய்ய மரங்களை நாம் நடவு செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரும் கடமையாக செய்ய வேண்டும்.

நிதி தராத மத்திய அரசு
மக்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு சார்பில் மக்களவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை சரிவர தரப்படவில்லை. அடுத்து வரும் நிதியை வைத்து மக்களின் கோரிக்கைகள் அனைத்து பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்'' என்றார்.

கஜானா காலியானாலும் உதவி
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ‛‛அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக டெண்டர்கள் விடப்பட்டன. இதனால் துடைப்பம் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இருந்தன.ஆனால் திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளே டெண்டர்விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்கின்றன. இதற்கான உரிமையை தமிழக முதல்வர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார். ஊராட்சி தலைவர்களின் படியையும் உயர்த்தி உள்ளார். அரசு கஜானாவே காலியாக உள்ளது. புதுப்புது திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நெருக்கடியிலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறம்பட செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரமும், தொழிலும் உயரும்'' என்றார்.


Click it and Unblock the Notifications
