திருச்செந்தூர் கடலில் சீறிய அலைகள்.. ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பெண்.. அலறியடித்த பக்தர்கள்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் இன்று திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பக்தர்கள் சிலருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. மேலும் கடல் அலையும் அவரை இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் பாதுகாவலர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்செந்தூர் கடலில் அடிக்கடி இப்படி திடீரென கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும், இன்று மட்டும் 4 பக்தர்களுக்கு இதனால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கோவில் பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். 4 பேரும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

திடீரென கடல் சீற்றம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வழிபடுகிறார்கள். கடலில் ஆனந்தமாக குளித்துவிட்டு முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர்.
அப்போது பக்தர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரும் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருந்தார். அவரது மனைவி மீனாட்சி (வயது 36) கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது.
பெண்ணின் கால் முறிந்தது
இதில் மீனாட்சியின் கால் இரண்டாக முறிந்தது. எலும்பு முறிவு ஏற்பட்டதில் ரத்தம் அதிகளவு கொட்டியுள்ளது. மேலும் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். ரத்தம் அதிகமாக கொட்டியதில் மீனாட்சி மயங்கினார். இதையடுத்து அங்கு நின்றவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தினர். இதையடுத்து அங்கு நின்ற கோவில் பாதுகாப்பாளர்கள், தன்னார்வலர்கள், பெண் காவலர் உள்ளிட்டோர் கடலில் இறங்கி மீனாட்சியை மீட்டனர்.
உடனடியாக அவர் அங்கிருந்து கோவிலின் இலவச ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவி மையம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோன்று மேலும் 3 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு
வழக்கமாக பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடலின் நீர்மட்டம் உயர்ந்தும், உள்வாங்கியும், கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவது இயல்பு தான் என்றாலும் இன்று ஒரே நாளில் 4 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற நாட்களில் பக்தர்கள் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் கடலில் நீராட வேண்டும் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கினர்.












Click it and Unblock the Notifications