தூத்துக்குடியில் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த விவசாயி.. எமன் போல் என்ட்ரியான நாகப்பாம்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் வென்றான் அருகே சந்திரவேல் என்ற விவசாயி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு பாம்பு என்ன செய்தது தெரியுமா? கிராமங்களில் இரவு நேரத்தில் வீட்டு வாசலில் பாம்புகள் செல்லும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. நடந்த சம்பவத்தை பாருங்கள்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விவசாயப் பணிகள் மற்றும் இரவு நேரங்களில் வெளிப்பகுதிகளில் நடமாடும் போது பாம்புகள் கடித்து விடுகின்றன. பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் பிழைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் சில பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை நடக்க வைப்பது, அவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்குவது போன்ற காரணங்களால் விஷம் ஏறி இறந்து போகிறார்கள். அதேபோல் சரியான மருத்துவ வசதிகள் உடனடியாகக் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இன்மையாலும் பலரும் கிராமங்களில் இறக்கிறார்கள்.

நாகப்பாம்பு, கண்ணாடி விரியன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற மூன்று பாம்புகளே அதிக விஷம் நிறைந்தவை ஆகும். இதில் எந்த பாம்பு கடித்தாலும் விஷம் ரத்தத்தின் வழியாக நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இந்த விஷம், நரம்புகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது வழக்கம் ஆகும். இதன் காரணமாக, கடிபட்ட நபருக்கு மூச்சு விடுவதில் சிரமம், கை கால்களில் ஏற்படும் தளர்ச்சி மற்றும் பலவீனம், தள்ளாடும் நடை, பார்வை மங்குதல், இரட்டைப் பார்வையாகத் தெரிதல், மற்றும் கண் இமைகளைத் திறக்க முடியாமல் சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
இரண்டு புள்ளிகள் போல் ஓட்டை
அதேபோல் பாம்பு கடித்ததற்கான விஷப் பல்லின் அடையாளம் உடலில் இருந்தால் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விஷப்பாம்பு கடித்தால் இரண்டு புள்ளிகள் போல் ஓட்டைகள் இருக்கும். வாயை திறந்ததும் பாம்புகள் கடிக்கும் போது, கொக்கி போன்ற இரண்டு பற்கள் வழியாக விஷத்தை கக்குகின்றன. அதேநேரம் ஒருவரை விஷ பாம்பு தீண்டினால் உடனே சாகமாட்டார். ஏனெனில் பல நேரங்களில் பாம்புகள் கடிப்பதோடு நிறுத்திவிடுகின்றன விஷத்தை உடலில் செலுத்த முயற்சிப்பது இல்லை.
80 சதவீதம் வாய்ப்பு குறைவு
நாகப்பாம்பை பொறுத்தவரை 80 சதவீதம் விஷத்தை செலுத்தாமல் கடிக்கவே முயற்சி செய்யுமாம். ஆனால் சில நேரங்களில் தான் விஷத்தை செலுத்திவிடுகின்றன. பாம்பு கடித்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பயப்படாமல், பதற்றம் இல்லாமல் மருத்துவமனைக்கு விரைந்து செல்வது தான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல் பாம்பு கடிக்கு அதிக வாய்ப்பு உள்ள பகுதிகளான கிராமங்களில் இரவில் கவனமாக இருக்க வேண்டும்.
பாம்புக்கடி
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த 6 0 வயதாகும் சந்திரவேல் என்ற விவசாயி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு பாம்பு அவரை கடித்திருக்கிறது. இதனையடுத்து அரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மேட்டுப்பாளையத்தில் பாம்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பஸ்நிலையம் அருகே ஒரு செருப்பு கடை முன்புள்ள ஓட்டையில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை அலுவலர் அனில்குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 அடி நீளமுள்ள நாகப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், நாகப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.












Click it and Unblock the Notifications