கோவில்பட்டியில் நான் இல்லைனா என்ன... ராஜா பார்த்துக்குவார்... பேச்சால் டிடிவி தினகரனுக்கு மைனஸ்..!
தூத்துக்குடி: கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் அடைந்துள்ள தோல்விக்கு அவரது பேச்சுக்களே காரணம் எனக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலோ அல்லது உசிலம்பட்டி தொகுதியிலோ தான் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோவில்பட்டி தொகுதியில் களமிறங்கி பலரது புருவங்களை உயர்த்த வைத்தார் தினகரன்.

இதையடுத்து டிடிவி தினகரன் எப்படியும் அங்கு வெற்றிபெற்றுவிடுவார் அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜூவின் வெற்றி கடினம் தான் தகவல்கள் உலா வரத் தொடங்கின. அந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் கருத்துக் கணிப்பு முடிவுகளும் அமைந்திருந்தன.
பிறகு எப்படி 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் தோல்வியை தழுவியிருப்பார் என்று பார்த்தால் அதன் பின்னணியில் அவரது பேச்சு இருந்ததாக தெரிகிறது. தினகரன் வெளியூர்காரர் அவரை பொதுமக்கள் எளிமையாக அணுக முடியாது என அதிமுக தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
மேலும், தினகரனுக்கு வாக்களித்தால் ஆர்.கே.நகர் மக்கள் கெதி தான் உங்களுக்கும் என அதிமுக தரப்பு முழு மூச்சாக பிரச்சாரம் செய்திருக்கிறது. அதற்கு பதிலடி கொடுப்பதாக பேசிய தினகரன், நான் வெளியூராக இருந்தால் என்ன, இங்குதான் ராஜா (மாணிக்கராஜா) இருக்கிறாரே, அவர் பார்த்துக் கொள்வார். என்னிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுக்களை அவரிடமே கொடுக்கலாம் என பரப்புரைக்கு சென்ற இடங்களில் பேசியிருக்கிறார்.
இது அவருக்கு தேர்தலில் மைனஸாக அமைந்துவிட்டது. ஒரு பேச்சுக்காவது கோவில்பட்டியில் வீடு பிடித்து தொகுதியில் குடியேறுவேன் என தினகரன் கூறியிருந்தால் அவரது வெற்றி தடுக்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். இதுமட்டுமல்லாமல் மாணிக்கராஜா பொறுப்பில் கோவில்பட்டியை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் அவர் டூர் அடித்ததும் இந்த சறுக்கலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே தனது தோல்வியை காட்டிலும் அதிமுக அடைந்த தோல்வி தினகரனை உற்சாகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications