தூத்துக்குடியில் திமுக நிகழ்ச்சிகளில் கனிமொழி புறக்கணிப்பு? என்ன நடந்தது! உதயநிதி ஸ்டாலின் பரபர
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருப்பினும், அதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக எம்பியுமான கனிமொழி கலந்து கொள்ளவில்லை... இதற்கிடையே உதயநிதி நிகழ்ச்சியில் கனிமொழி புறக்கணிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாகத் துணை முதல்வர் உதயநிதி முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் போதிலும் இப்போதே அங்குத் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை திமுகவினர் தொடங்கிவிட்டனர். கள ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்: குறிப்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு மற்றும் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போது துணை முதல்வர் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்ற உதயநிதி, இன்று காலை முதல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம், திமுக பிரமுகரின் இல்ல திருமண விழா என்று கட்சி ரீதியான நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அரசின் திட்டப் பயணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள், நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் உதயநிதி கலந்து கொண்டுள்ளார்.
கனிமொழி இல்லை: அதேநேரம் தூத்துக்குடியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் எம்பியாக இருக்கும் திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி இந்த நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவரது பெயரும் கூட எந்தவொரு நிகழ்ச்சி பேனரிலும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து வரும் கனிமொழி இதில் கலந்து கொள்ளாதது பேசுபொருள் ஆனது.
உதயநிதி தூத்துக்குடியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பொதுவாக இதுபோல நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்டத்தின் எம்பியும் கலந்து கொள்வார்கள். ஆனால், கனிமொழி இதில் பங்கேற்கவில்லை. அவரது பெயரும் கூட அதில் இடம்பெறவில்லை. இதில் அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர்.
புறக்கணிப்பு: தூத்துக்குடியில் உதயநிதி நிகழ்ச்சிகள் குறித்து கனிமொழிக்கு கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானது. இது அங்குப் பேசுபொருளானது. உதயநிதி நிகழ்ச்சியில் கனிமொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இதற்கிடையே உதயநிதியே இது தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். கனிமொழி வெளிநாட்டில் இருப்பதாலேயே இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி விளக்கம்: இது தொடர்பாகத் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, "நான் இங்கு வரும்போது கூட கனிமொழி எம்பியிடம் பேசிவிட்டுத் தான் வந்தேன். அவர் இப்போது வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.. இதன் காரணமாகவே அவரால் இன்றைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலவில்லை. மற்றொரு நாள் வேறொரு நிகழ்ச்சியில் நிச்சயம் இருவரும் சேர்ந்து கலந்து கொள்வோம்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications