பக்கத்து வீட்டு கதவு 5.20 மணிக்கு ஏன் திறந்திருந்தது? சிசிடிவியில் தூத்துக்குடி போலீசுக்கே ட்விஸ்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில் மாயமான ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகள், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டுத் தம்பதியினர் இணைந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட இந்த விபரீதக் கொலை மற்றும் உடலை நிலத்தில் புதைத்த திடுக்கிடும் பின்னணி குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை(62). இவர், காவல் துறையில் எஸ்ஐயாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தாதேவி(34).

இவருக்கும் கிருஷ்ணகுமார்(39) என்பவருக்கும் கல்யாணமாகி 9 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வெல்டிங் காண்ட்ராக்ட் கம்பெனி நடத்தி வரும் மாரிமுத்து (42) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரவணப்பிரியா(34). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து பிருந்தாதேவியை காணவில்லை. இதனால் மாஜி எஸ்ஐ செல்லத்துரை, மகள் பிருந்தாதேவியை காணவில்லை என சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
சிப்காட் போலீஸ் அதிரடி
இந்த புகாரின் பேரில் போலீசார் பிருந்தாதேவியின் வீட்டின் முன்புள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை சுமார் 5.20 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வதும், அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் பிருந்தாதேவி அவரது வீட்டிற்குள் செல்வதும் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சேர்ந்து பிருந்தாதேவியை கொலை செய்து, உடலை எடுத்து சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டனர். உடனடியாக இதுகுறித்த விசாரணையும் ஆரம்பமானது. அப்போது விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின..
தவறான பழக்கம் - கொடூர கொலை
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, பிருந்தாதேவியின் கணவர் கிருஷ்ணகுமார் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில், மாரிமுத்துவுக்கும் பிருந்தாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்த அறையில் சரவணப்பிரியா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் பிருந்தாதேவிக்காக வீட்டின் கதவை மாரிமுத்து திறந்து வைத்துள்ளார்.
சிறிதுநேரத்தில் பிருந்தாதேவி வரவே இருவரும் மற்றொரு அறையில் தனிமையில் இருந்துள்ளனர். இதை சரவணப்பிரியா நேரில் பார்த்து விட்டாராம்.. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப்பிரியா பிருந்தாதேவியை தாக்கியுள்ளார். மேலும் கணவர் முன்னிலையிலேயே தலையணையை எடுத்து பிருந்தாதேவியின் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
சாக்கு மூட்டையில் சடலம்
பிறகு உடலை மறைக்கும் வகையில், மாரிமுத்துவின் உதவியுடன் பிருந்தாதேவியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர். தொடர்ந்து சரவணப்பிரியாவின் தம்பி கார்த்திக் உதவியுடன், வீட்டின் பின்பக்க வழியாக உடலை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் அடுத்த சிலோன் காலனி பகுதியில் உள்ள மாரிமுத்துவிற்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் மாரிமுத்து மற்றும் சரவணப்பிரியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒட்டப்பிடாரம் நிலத்தில் புதைக்கப்பட்ட பிருந்தாதேவியின் உடலை போலீசார் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், காருடன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications