வேலூர் ஜனனி பிரியா காதலருடன் எஸ்பி ஆபீஸில்.. போலீஸ் முன்பு யாரும் எதிர்பார்க்காத சம்பவம்
வேலூர்: என்ன தான் இன்றைக்கு கல்வியால் ஒருவரின் வாழ்க்கை தரம் மாறினாலும், சாதியின் பெயரால் அந்தஸ்து என்ற பெயரில் காதலை வெறுப்பது தொடர்கிறது. காதலை எதிர்க்க பல காரணங்கள் பெற்றோருக்கு இருக்கிறது என்றாலும் முதன்மையான காரணமாக சாதி தான் இருக்கிறது. ஒரே படிப்பு, நல்ல சம்பளம் என்றாலும், காதலை எதிர்க்க ஜாதி காரணமாக இருக்கிறது. அந்த வகையில் வேலூரைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்த நிலையில், பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்திற்கு வந்த போது, யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
காதலிக்க ஆண் பெண், எவ்வளவு உரிமை இருக்கிறதோ.. அதே உரிமை காதலிப்பவர்களின் குணநலன்களை அறியவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் காதலில் விழுந்து அவசரத்தில் திருமணம் முடித்துவிட்டு பின்னாளில் சிக்கலில் சிக்கினால் இருவருமே பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.

அதேநேரம் நல்ல வேலை, படிப்பு, சம்பளம் என எல்லா வசதிகளும் இருந்தாலும், சாதியை காரணம் காட்டி வறட்டு பிடிவாதத்துடன் காதலையும், காதல் திருமணத்தையும் வெறுப்பது அதிகமாக இருக்கிறது. வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த 25 வயதாகும் லோகேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குடியாத்தத்தை சேர்ந்த 23 வயதாகும் ஜனனிபிரியா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கணியம்பாடி யில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் ஒன்றாக படித்த போது, இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாம்.
கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம் ஜனனிபிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கடந்த 17-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெற்றோர்களால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜனனி பிரியாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது ஜனனி பிரியாவின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து, திடீரென லோகேசை கையால் சரமாரி அடித்ததாக சொல்லப்படுகிறது. ஜனனிபிரியாவையும் அவர்கள் தாக்க முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது டிஎஸ்பி மற்றும் போலீசாரிடம் தங்கள் பெண்ணுக்கு எதிராகவும், காதல் திருமணத்திற்கு எதிராகவும் பெண்ணின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய பெண்ணின் குடும்பத்தினரை விசாரணைக்காக சத்துவாச்சாரி போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications